இந்த விளக்கப் பதிவு காலத்தின் கட்டாயம் கருதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது.. கனுசியா போல் நூற்றுக்கணக்கான கனுசியாக்களும் பெற்றோர்களும், வடக்கு கிழக்கில், இலங்கையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. பாடசாலை அனுமதிகளில் நிலவும் முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், பாராமுகம், தன்னிச்சையான செயற்பாடுகள் முதலான காரணிகள், ஏராளம் சிறுவர்களின் மனங்களில் காயங்களை உண்டுபண்ணியிருக்கின்றன.
அந்த வகையில் கனுசியாவின் பாடசாலை அனுமதியில் தவறு நடந்திருப்பது எமது பிரதேச செய்தியாளருக்கு எட்டியிருக்கிறது. அவர் அதனை செய்திக் கட்டுரையாக விவரணமாக எமது குளோபல் தமிழ்ச் செய்திகளில் பதிவிட்டு இருக்கிறார்.
எனினும் தமிழ்ச் செல்வனின் செய்தியிடல் முறை, அதனை விவரித்த விதம், குளோபல் தமிழ்ச் செய்திகள் அதனை வெளிக்கொணர்ந்தமை, குறித்து தனிப்பட்ட வகையில் எம்மிடம் பலர் கேள்வியெழுப்பி இருந்தனர்.முகநூல் உள்பெட்டியிலும், தொலைபேசி அழைப்பிலும், மின் அஞ்சலிலும் தமது அதிா்ப்திகளை, கவலைகளை, வெளியிட்டு இருந்தனர்.
அவற்றின் அடிப்படையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களை தமிழ்ச் செல்வனிடம் கேட்டு இருந்தோம். அதற்கமைவாக அவர் மீண்டும் இங்கு பதில் அளிக்கிறார்.
கடந்த 8 வருடங்களாக குளோபல் தமிழ்ச் செய்திகள் இயன்றவரை பொறுப்புடனும், ஊடகதர்மத்துடனுமே செயற்பட்டு வந்திருக்கிறது. எமது பக்கத்தில் தவறுகள் நிகழ்ந்த ஒரு சில சந்தர்ப்பங்களில், வாசகர்களிடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும் பகிரங்க மன்னிப்பை கேட்டு இருக்கிறோம். தவிரவும் சம்பந்தப்பட்டவர்களின் மறுப்புக்களை தணிக்கை இன்றி வெளியிட்டு இருக்கிறோம்.
அந்த வகையில் கனுசியாவுக்கான நியாயம் தேடலில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தரப்பிலோ, அதன் செய்தியாளர் தமிழ்ச்செல்வன் தரப்பிலோ தவறு இருப்பின் பாடசாலை நிர்வாகம், பாடசாலை சமூகம், நலன்விரும்பிகள் ஆதாரபூர்வமாக மறுப்பை தெரிவிக்கும் பட்சத்தில் அதனை தணிக்கை இன்றி முழுமையாக வெளியிடுவதுடன் நாம் பகிரங்க மன்னிப்பையும் வெளியிடுவோம் என தெரிவிக்க விரும்புகிறோம்…
ஆ.ர்
கனுசியாவின் பாடசாலை அனுமதி குறித்த செய்தியும் அது குறித்த சர்ச்சைகளும் தமிழ்ச்செல்வனின் விளக்கமும்:-
நா.கனுசியாவுக்கு தரம் ஆறில் படிப்பதற்கான அனுமதி பாடசாலைகளில் கிடைக்காத விடயம் தொடர்பான விடயம், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, 18 நாட்களின் பின்னர் என்னால் வெளிக்கொணரப்பட்டது. அது பலரின் கவனத்தை ஈர்த்து தற்போது கனுசியா கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆனால், இந்தச் செய்தியை நான் வெளிப்படுத்துவதற்கு முன்னர், 18-01-2017 உதயன் பத்திரிகையின் நான்காம் பக்கத்தில் “இரண்டு மாணவர்களை வலயக் கல்வித்திணைக்களம் கடிதம் கொடுத்தும் மத்திய கல்லூரி அதிபர் சேர்க்கவில்லை“ என்ற தலைப்பில் இந்த விடயம் தொடர்பான செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தி வெளிவந்து இரண்டு நாட்கள் கடந்தும் கனுசியாவுக்கு பாடசாலையில் அனுமதி கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் இந்தப் பிரச்சினை குறித்த விடயம் என்னால் கட்டுரையாக எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்தது
தற்போது இந்த விடயம் தொடர்பாக, நீதிமன்றம், ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பு, மாவட்ட சிறுவர் நன்நடத்தைப் பிரிவு என்பன கவனம் செலுத்தியதாக அறிகிறேன்.
இந்த நிலையில் எனது கட்டுரை தொடர்பில் என் மீது சிலரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே இது தொடர்பில் நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நா. கனுசியா தரம் ஐந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் ஊட்டப் பாடசாலையாகும். அதன் தாய்ப் பாடசாலை கிளிநொச்சி மத்திய கல்லூரியே. இதேவேளை கனுசியாவின் சகோதரி இன்றும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கின்றார். எனவே கனுசியாவின் விடயத்தில் ஒரு ஊட்டப் பாடசாலையின் தாய்ப் பாடசாலைக்கே அதிக பொறுப்பு உண்டு. அத்துடன், ஒரே வளாத்திலேயே இரண்டு பாடசாலைகளும் இயங்கியும் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனுசியாவின் தாய் தனது பிள்ளையை ஆறாம் ஆண்டில் சேர்ப்பதற்காக மத்திய கல்லூரிக்குச் சென்ற போது அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்குச் சென்றிருக்கின்றார். அங்கு கோட்டக் கல்வி அதிகாரி, கனுசியாவை மத்திய கல்லூரியில் சேர்க்குமாறு கடிதம் அனுப்பியிருக்கின்றார். குறித்த கடிதத்துடன் தாய் மத்திய கல்லூரிக்கு சென்று கடிதத்தை வழங்கியிருகின்றார். கடிதத்தை பெற்றுக்கொண்ட பாடசாலை நிர்வாகம், மாணவியை சேர்த்துக்கொள்ளவில்லை. (கடிதத்தின் நிழற் பிரதி தாயிடம் உள்ளது)
பின்னர் வலயக் கல்வித்திணைக்களம் செல்கின்றார் கனுசியாவின் தாய். அங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மேல் பகுதியில் குறிப்பிட்டு கோட்டக் கல்வி அதிகாரிக்கு பணிப்புரை விடுகின்றார். அதன்படி கனுசியாவை கிளிநொச்சி மத்திய கல்லூரி அல்லது விவேகானந்தா வித்தியாலயத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்திலேயே கோட்டக் கல்வி அதிகாரி அமிர்தலிங்கம், அதிபர் விவேகானந்தா வித்தியாலயம் என முகவரியிட்டு மாணவியை சேர்த்துக்கொள்ளுமாறு குறிப்பிடுகின்றார்.
கடிதத்துடன் தாய் விவேகானந்த வித்தியாலயத்திற்கு செல்கின்றார். அங்கே மாணவர்கள் தொகை அதிகமாக உள்ளதால், இடமில்லை என அனுமதி மறுக்கப்படுகிறது. பின்னர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு செல்கின்றார் கனுசியாவின் தாயார். அங்கும் அயலிலுள்ள பாடசாலையை விட்டு இங்கு ஏன் வருகின்றீர்கள் என்கின்றனர். தனது பிள்ளை பாடசாலைக்கு அண்மித்திருக்கும் திருநகரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்தே பாடசாலைக்கு வருவார் என கனுசியாவின் தாய் கூறியிருக்கின்றார். அப்படியானால் கிளிநொச்சி திருநகரில் வசிப்பதாக கிராம அலுவலரின் கடிதம் ஒன்றை பெற்று வருமாறு கோரப்படுகின்றார். தாங்கள் வதியாத கிராமத்தில் அந்த கிராம அலுவலர் உறுதிப்படுத்தற் கடிதம் வழங்க மாட்டார். எனவே எதுவும் செய்ய முடியாத நிலையில் விரக்தியில் வேறு வழியில்லை என்று இருந்து விட்டார் கனுசியாவின் தாய்.
இந்த நிலையில் கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தில் முறைசாரா கல்விப் பிரிவைச் சேர்ந்த பேரின்பராஜா என்பவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு கனுசியாவுடன் வேறொரு மாணவியின் பெயரையும் குறிப்பிட்டு இவர்களை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு கடிதம் ஒன்றை எழுதி தாயாரிடம் வழங்குகின்றார். அதனை கொண்டு மகா வித்தியாலயத்திற்கு செல்கின்ற போதே சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள் தங்களின் அலுவலகத்திற்கு குறித்த பிள்ளையின் தாயாரை அழைக்கின்றனர்.
அங்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் வலயக் கல்வித்திணைக்களம் ஆகியோருடன் பேசி சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி கூறுகின்றார். இந்த நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் கனுசியாவை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதாகவும் எனவே சனிக்கிழமை 21-01-2017 ஆவணங்களுடன் சமூகளிக்குமாறு தகவல் அனுப்புகிறார். அதற்கமைவாக தாய் அங்கு செல்கின்றார். ஆனால் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தனது மகளை அங்கு சேர்ப்பதற்குரிய மனநிலையை இல்லாது செய்து விட்டது என்ற நிலையில், வலயக் கல்வித்திணைக்களத்தின் முறைசாரா கல்வி பிரிவைச் சேர்ந்த பேரின்பராஜாவின் கடித்திற்கு அமைவாக மீண்டும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற் செல்கின்றார்.செல்லும் போது தன்னை கிளிநொச்சி ஏ9 வீதி டிப்போச் சந்திக்கருகில் வைத்து இளைஞர் ஒருவர் வழிமறித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அலுவலகத்தில் இருகின்றார். எனவே அங்கு வந்து இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கூறும்படி அழைத்துச் சென்றரர் எனவும். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சென்று பிள்ளையைச் சேர்க்கும்படி கூறினார் என்றும் தாய் குறிப்பிட்டார்.
இதுவே இந்த விடயம் தொடர்பாக நடந்த தொடர் சம்பவங்களாகும்.
ஆனால், இந்தத் தொடர் நடவடிக்கையை முழுமையாக அறியாமலும் ஆராய விரும்பாமலும் எழுந்தமானத்தில், என்மீதும் என்னுடைய செய்தியறிக்கை மீதும் குற்றச்சாட்டுகள் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. முகப்புத்தகங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பாரபட்சமாக நான் நடந்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மீது எனக்கு எவ்வித முரண்பாடுகளும் தனிப்பட்ட ரீதியான கோபங்களும் இல்லை. நான் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர். அத்துடன் அங்கே சிரேஸ்ட மாணவத்தலைவனாகவும், உயர்தர மாணவர் ஒன்றிய தலைவனாகவும் இருந்தவன். இப்போது அதிபராக பதவி வகிப்பவர் எனது ஆசிரியராவர். என்னுடைய பாடசாலை எனக்கு வழங்கிய அறிவு, ஆற்றல் வெளிப்பாடு, ஆளுமை உருவாக்கம், துணிவு, நீதியின் பக்கம் நிற்பதற்கான கடப்பாடு என்ற ரீதியிலேயே
குறித்த கட்டுரையில் பாதிக்கப்பட்ட பிள்ளையின் உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு, ஒரு ஊட்டப்பாடசாலையின் தாய்ப் பாடசாலைக்கே அதிகம் பொறுப்பு இருக்கிறது என்ற அடிப்படையிலும் என்னுடைய செய்தி அறிக்கையை வெளியிட்டேன். பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருடைய நீதிக்காகச் செயற்பட்டதன் மூலமாக என்னுடைய பாடசாலைக்கு நான் பெருமை சேர்த்திருக்கிறேன். இதற்கான என்னுடைய பாடசாலைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
வலயக் கல்வித் திணைக்களம் பிள்ளையைச் சேர்த்துக்கொள்ளுமாறு முதலில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கே கடிதம் எழுதியது என்ற வகையிலும், பிள்ளையின் வீட்டுக்கும் விவேகானந்தா வித்தியாலயம் மத்திய கல்லூரி என்பன ஒரே அளவான தூரத்தை கொண்ட பாடசாலைகள் என்ற வகையிலும், பிள்ளையின் சகோதரி இன்றும் மத்திய ஆரம்ப வித்தியாலத்தில் கல்வி கற்கின்றார் என்பதனால் இரண்டு பிள்ளைகளையும் ஒரே வளாகத்தில் கற்பிக்க வைப்பது, ஏழ்மையான பெற்றோரின் போக்குவரத்து நலன் கருதியும் எனது கட்டுரையை எழுதியிருந்தேன்.
அத்துடன், கனுசியாவின் தாய் மகளுடைய பாடசாலை அனுமதிக்காக வேறு இரண்டு பாடசாலைகளுக்குச் செல்கின்றார், அனுமதி தருமாறு மன்றாடுகின்றார். ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை. என்றும் தவறாமல் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இதில் எதையும் நான் மறைக்கவோ அதிகமாகச் சேர்க்கவோ இல்லை என்பதை செய்தியை மீள வாசித்து அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட விரும்புகிறேன். இதில் வேறு எந்த உள் நோக்கங்களுக்கும் இடமிருந்ததில்லை. எனவே குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள்,
தவிர, செய்தி அளிக்கை முறைமையில் சில செய்திகளுக்குத் தொடர்ச்சி இருப்பதுண்டு. அப்படியான சந்தர்ப்பத்தில் அந்தத் தொடர்ச்சியை அவதானித்த பின்னரே குறித்த செய்தி தொடர்பான தீர்மானத்துக்கு வரமுடியும். அதற்கு முன் அவசரப்பட்டு செய்தியாளர் மீதும், செய்தி நிறுவனத்தின் மீதும் குற்றம் சுமத்த முற்படுவது நியாயமற்றது என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.