ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசா ரணை நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநரை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அளித்த மனுவில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் செய்த கெடுபிடிகள், அவர்களைக் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போரா டியவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தப்பட்டு, பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரையே போர்க்களம் போல காட்சியளிக்கும் அளவுக்கு காவல் துறையினர் அடக்குமுறையில் ஈடு பட்டிருப்பது கவலையளிக்கிறது.
இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.