காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகரை சென்றடைந்து அங்கிருந்து உண்ணாவிரதம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலை சென்றடைந்தது.
வைத்திய உதவிகளை நிராகரித்து உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது: நால்வரது உடல்நிலை பாதிப்பு
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், தம்மை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வேண்டாமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களில் சிலர் மயக்கமுற்ற நிலையில் காணப்படுவதோடு, குளுக்கோஸின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்றைய தினம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயொருவர் உடல் நலம் குன்றி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.
அத்தோடு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.