குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்நாட்டு அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தார் என அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ தெரிவித்துள்ளது. சீ.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
1987ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலை இலக்கு வைத்து, ராஜீவ் காந்தி இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்தார் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதிக்கு இந்திய ஹெலிகொப்டர் மூலம் உணவு உள்ளட்ட பொருட்களை கொண்டு வந்து வழங்கியிருந்த நடவடிக்கையானது இந்து மக்களை திருப்திபடுத்தி வாக்குகளை வெற்றிக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது எனவும் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1987ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி சீ.ஐ.ஏ வின் குறிப்பு ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையுடனான செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது குறுகிய நோக்கிலானது எனவும், இலங்கையை இந்தியா இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடும் எனவும் சீ.ஐ.ஏவின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக காணப்பட்ட காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அதன் மூலம் வடக்கு தமிழர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொண்டு அதன் ஊடாக தமிழக மாநில மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள ராஜீவ் முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.