குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலை சதி முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வடக்கில் புலனாய்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் காண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் கொலை முயற்சி தொடர்பில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரனின் உயிருக்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் பிரதமர் அலுவலகம், சுமந்திரனுக்கு அறிவித்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் சுமத்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்தேக நபர்களிடமிருந்து க்ளைமோர் குண்டுகளும் ஏனைய வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் கடந்த 13ம் திகதி தம்மை படுகொலை செய்ய சிலர் திட்டமிட்டிருந்தனர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
1 comment
தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், கடந்த 13ம் திகதி தம்மை படுகொலை செய்ய சிலர் திட்டமிட்டிருந்தனர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் திரு. சுமந்திரன் தெரிவித்துள்ளபோதும், இச் செய்தி எவ்வளவு தூரத்துக்கு நம்பகமானது என்ற சந்தேகம் ஒவ்வொரு தமிழனுக்கும் எழவே செய்கின்றது!
இது மட்டுமன்றி நாளை, ‘திரு. சம்பந்தனைக் கொலை செய்யச் சதி நடக்கின்றது’, என்ற செய்தி அரசிடமிருந்து வந்தாலும் ஆச்சரியமில்லை! காரணம், வருகின்ற மாதம் 24 ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் மாகாநாட்டுக்கு முன், இது போன்ற சில நாடகங்களை அரங்கேற்றவேண்டிய தேவை அரசுக்கிருப்பதை மறுக்க முடியாது! மேலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கற்ற திரு. சுமந்திரனுக்கு இது போன்றதொரு பிரச்சாரம் இப்பொழுது தேவையாக இருக்கலாம்?
ஆக, இது போன்ற கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள், மைத்திரி- ரணில் அரசும், தமிழரசுக் கட்சியினருமாக இருந்தாலும் ஆச்சரியமில்லை? திரு. சுமந்திரனைக் கொல்ல வேண்டிய தேவை யாருக்கும் இல்லை, என்றே சொல்ல வேண்டும்! குறிப்பாக, இல்லாத புலிகளால்(?) எப்படி ஒரு தாக்குதலை மேற்கொள்ள முடியும்? தமிழ் மக்கள் மத்தியில் செறிந்து காணப்படும் இராணுவத்தினரால், அன்று புலிகளிடமிருந்து கைப்பற்றிய கிளைமோர் குண்டுகளை முன்னாள் போராளிகளின் வாழ்விடங்களில் மறைத்து வைப்பதும், பின் கண்டு பிடிப்பதும், முடியாத காரியமல்லவே?
சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் நடவடிக்கைகளைத் திசைதிருப்ப, அரசுக்கு இது போன்ற போலிப் பிரச்சாரங்கள் அவசியமாகின்றன, என்பதை மறுக்கவும் முடியுமா?