இந்த கட்டுரை 25 01 2017 முதல் நானும், எனது சக ஆசிரியர்களும், ஆய்வு/முதுகலை மாணவர்களும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மீனவ குடியிருப்பு பகுதிகளான நடுகுப்பம் மற்றும் மாட்டங்குப்பம் வாழ் மக்களின் சொல்லெஈன துயரங்கள் தமிழக காவல் துறை காவலர்களால் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை கண்டறிய செயல்படுத்திய உண்மை கண்டறியும் களப்பணியில் திரட்டிய தகவல்களின் பாதிப்பால் எழுதப்பட்டது, நூற்றுக்கணக்காண பெண்கள், ஆண்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள் உடல்களிலும்/மனங்களிலும் தோற்றுவிக்கப்பட்ட காயங்கள், வலிகள் இந்த மாமனிதர்களை சந்திக்கும் எந்த சார்பற்ற மனிதரையும் நிலைக்குலைய செய்யும். அடித்தட்டு மக்கள் மாமனிதர்கள் என்பதை இவர்களின் கடந்த கால செயல்பாடுகளும், காவலர்களின் வன்முறைக்கு பயந்து மீனவ குடியிருப்பு பகுதிகளுடே தப்பி ஒடி அடைக்கலம் பெற்ற மாணவர்களின் கட்டுகோப்பையும் சமுக/தமிழ் உணர்வைப் பற்றி சிலாகத்தி பேசிய மீனவப் பெண்கள் எழுப்பிய கோள்விகளினுடே விளைந்தது இந்த கட்டுரை. “ஆறு நாட்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் காப்பற்றப் பட வேண்டியவர்கள்”, “யார் “சமூக/தேச விரேதிகள்,” “மாணவர்கள் சமூக/தேச விரேதிகள் அல்ல,” “எங்களைப் பார்த்தால் தீவிர வாதிகள் மாதிரி தெரிகிறாதா”, “போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு தண்ணீர் கொடுத்தது பாவமா” இந்த கட்டுரையின் ஆங்கில மூலம் இங்கு உள்ளது.
அறவழியில் போராடிய இலட்சக்கணக்கான மாணவர்கள்/ மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் அளவில், தமிழகம் முழுவதும் 23 01 2017 அன்று தமிழக காவல் துறை ஆயிரக்கணக்கான போராட்டக்கரர்களை வரலாறு காணாத வன்முறையால் எதிர் கொண்டது தறிக்கெட்டு இயங்கும் அரசமைப்பை சுட்டுவதாகும். அலங்கநல்லுரில் ஒரு காவலர் குழுவாக அமர்ந்திருந்த அற வழிப் போராட்டக்கரர்களில் ஒரு இளம் பெண்னை கொடூராமான முறையில் தாக்கியதும், அந்த பெண்ணின் முகம் முழுவதும் இரத்தம் பீறிட்டதும், அந்த காட்சியை எண்ணிலாடங்க தமிழ் தொலைகாட்சிகளில் ஒரு தொலைக்காட்சி மட்டும் திரும்ப திரும்ப காட்டியதும் தமிழக காவல் துறைக்கு மட்டும் தலைக்குனிவு அல்ல, குடிமக்களாகிய நாம் எத்தகைய மோசமான சூழலில் இருக்கிறோம் என்பதை காட்டுவாதகும்.
சர்வாதிகார நாட்டில் போரட்டக்காரர்களுக்கு எதிராக நடக்க கூடிய வன்முறை அன்று ஆயிரக்காணக்கான போராட்டக்காரர்களுக்கு எதிராக சனநாயக நாட்டில் நடந்தது. முக்கியமாக அடித்தட்டு மக்களான மீனவர்களும் பாட்டாளி மக்களும் வசிக்கும் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ரூதர்புரம் பகுதிகளில் தமிழக காவல் துறையின் வன்முறை ரூத் ரத்தாண்டவமாடியது. வாகனங்களை கொளுத்தியும், பெண்களை தகாத வார்த்தைகளால் இழிவுப்டுத்தியும், சிறுவர் சிறுமிகளை துன்புறுத்தியும், முதியவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியும், லத்திகளால் அடித்தும் செயல்ப்பட்ட “காவலர்கள்’ இச்செயல்களை உயர்த் தட்டு/உயர் சாதி மக்கள் வசிக்கக் கூடிய பெசண்ட் நகர், அண்ணா நகர், இராஜா அண்ணாமலைப் புரம் பகுதிகளில் “சமுக விரோதிகளை” பிடிக்கிறேன் என்று செய்ய முடியுமா? மாட்டாங்குப்பத்தின் குறுகிய சந்துகளில் அப்பாவி அடித்தட்டு மக்களுக்கு எதிராக வன்முறையாட்டம் ஆடிய காவலர்கள் சில நூறு மீட்டர்கள் தள்ளி இருக்கும் பார்த்தசாரதி கோவில் தெருக்களில் “சமூக விரோதிகளை” துரத்தி செல்ல தடுத்தது எது? வர்க்க பிளவை சார்ந்து இயங்கும் காவல் துறை மற்றும் ஊடகப் துறைப் பொதுப்புத்தியில் கருப்பாக, அன்றாடங்காய்ச்சிகளாக, மனிதர்களாக இருக்கும் அடித்தட்டு மீனவ மக்கள் “சமுக விரோதிகள்” அல்லது தண்டனைக்குரியவர்கள். அதனால் தான் தந்தைப் பெரியார் சூட்டிக்காட்டிய கருப்புச் சட்டை கருத்தியலை உள் வாங்க மறுத்து, அவர் தந்த சமூக நீதி விழிப்புணர்வால் உருவான வேலை வாய்ப்புகளால் காவலர்கள் ஆன கருப்பு சட்டை அணிந்த கருப்பர்களான அடித்தட்டு தமிழர்களை அவர்களது வாழ்விடங்களில் காவல் துறை அடித்து நொறுக்கியது,
ரஷ்யாவில் சார் மன்னர் ஆட்சிக்காலத்தில்,சனவரி 5 1905ல், மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரச வன்முறை நினைவுட்டுவதாக அமைந்தது மேற்ச்சொன்ன வன்முறை. ரஷ்யாவில் உருவானது கருப்பு ஞாயிறு. தமிழகத்தில் 23 01 2017 உருவானது கருப்பு திங்கள்.
நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ரூதர்புரம், வியாசார்பாடி, கோவை, அலங்காநல் லுர் மற்றும் வேறு இடங்களில் நடந்த காவல் வன்முறையை, அமெரிக்கவின் செயிண்ட் லூயி நகரத்தின் அருகாமையில் இருக்கும் பெர்கூசன் பகுதியில் வாழும் கருப்பு இன மக்களுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த காவல் வன்முறையுடனும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடுக்கும் வன்முறையுடனும், வால்டர் பெஞ்சமனின் கருத்தியல் பார்வையில் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?
பெர்கூசன் வாழ் கருப்பு இன மக்களுக்கு எதிராக நடந்த காவல் துறை வன்முறையைப் பற்றி எழுதும் பொழுது, சோலேவேனிய நாட்டு தத்துவ அறிஞர் ஷிஷேக் வால்டர் பெஞ்சமனின் கருத்தியல் கூறுகளை நமக்கு சுட்டிக் காட்டுகிறார். ஷிஷேக் (2015) சொல்லியது, “அமெரிக்காவின் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில், காவல் துறை அப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் முகவர் ஆகவே செயல்படுகிறது. இஸ்ரேல் எவ்வாறு பால்ஸ்தீனியர்களின் பகுதிகளை ஆக்கிரமிக்கறதோ அப்படித் தான் அமெரிக்க காவல் துறையும் ஆக்கிராமக்கிறது. …காவல் துறை எப்பொழுது, சட்டத்தை காப்பற்ற கூடிய அமைப்பாக செயல்படாமல், வன்முறை முலம் சமுக மாற்றத்தை உண்டாக்கும் இன்னோரு முகவராக செயல்பாடுகிறதோ, அங்கு வெகு சமுகத்திற்கு எதிராக உருவாகும் போராட்டங்களும் திசை மாறுகின்றன. அருவ எதிர் மறை வெடிக்கிறது, அதாவது, இலக்கற்ற, எதிர் கொள்ள முடியாத வன்முறை.”
யார் வால்டர் பெஞ்சமன்? அவரது கருத்தியல்கள் சம கால தமிழக மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எவ்வாறு உதவ இயலும்?
வால்டர் பெஞ்சமன் 48 ஆண்டுகளே வாழ்ந்த அருமையான கருத்தியல்கள்/கோட்பாடுகளை வழங்கிய செர்மனிய தத்துவ அறிஞர் (1892-1940). யூதர். சமுக மாற்றத்திற்கான கூர் நிலை கோட்பாட்டியலை கட்டமைத்த பிராங்பர்ட் தத்துவ அறிஞர்கள் குழுமத்தை சார்ந்தவர். நாஜி உளவுப் படை அவரையும் அவரது சகோதரியையும் பாரீஸ் நகரத்தில் தேடும் பொழுது, அங்கிருந்து தப்பி அமெரிக்கா செல்லும் வழியில் ஸ்பெயின் நாட்டில் பயணிக்கும் பொழுது, அந் நாட்டு காவல் துறையால் செர்மனிக்கு நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவோம் என்ற செய்தியை அறிகிறார். அன்று இரவு, மனம் உடைந்து, வலி எதிர்ப்பு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தனது சகோதர் ஜியார்ஜ் மற்றும் நண்பர்களுடன் உண்டு தற்கொலைக்கு முயற்ச்சிக்கிறார். மற்றவர்கள் தப்புகிறார்கள். பெஞ்சமன் உயிரழக்கிறார். மறு நாள் கிடைத்த தகவல், அவரது உயிரழப்பை தத்துவ உலகின் மிகவும் வேதனையான இழப்பாக மாற்றுகிறது. வந்த தகவல்: ஸ்பெயின் நாடு இட்லரின் கொடுமைகளில் இருந்து தப்பி ஒடும் செர்மானியர்களை செர்மனிக்கு திருப்பி அனுப்பாது என்பதாகும்.
அவரது நெருங்கிய நண்பரும், அறிஞரும் ஆன அன்னா ஆர்ன்ட், அவர் கடைசியாக இறுதி செய்த படைப்பான “ஆய்வேடுகள்: வரலாற்றின் தத்துவம்” காப்பற்றுகிறார். ஆனால், பெஞ்சமன் அவர் கைப்பெட்டியில் வைத்திருந்த முற்றுப் பெறாத படைப்பு மறைந்து போனது மிகப் பெரிய அறிவுலக இழப்பு.
அவர் பெரிய நுல்களை படைக்கவில்லை. ஆனால், அவரது சிறு கட்டுரைகள் புரட்சிக்கரமான தத்துவ/கருத்தியல்களின் விளை நிலங்கள். அவர் 1921 ஆண்டு எழுதிய கட்டுரை “வன்முறை பற்றிய மதிப்பீடு.” இக்கட்டுரையில் பெஞ்சமன் முன் வைக்கும் வன்முறை சார் கருத்தியல்கள், வகைமகள், வாதங்கள் தமிழகத்தில் மக்களுக்கு எதிராக நடந்த காவல் வன்முறையை பற்றிய மாற்றத்திற்கான கூர் நிலைப் பார்வையை தர வல்லது.
வால்டர் பெஞ்சமனனின் பார்வையில் “வன்முறைகள்” இரு வகைப்படும்: அ) தொன்ம வன்முறை ஆ) தெய்வீக அல்லது வன்முறையற்ற வன்முறை. தொன்ம வன்முறை சட்டத்தை உருவாக்கும் வன்முறை மற்றும் சட்டத்தை அதே நிலையில் வைத்திருக்க உதவும் வன்முறை என்று அவரால் வகைப்படுத்தப்படுகிறது. அவரது மற்ற கட்டுரைகளுடன், மேல் குறிப்பிட்ட கட்டுரையும் நூலாக பின்னாளில் வெளியிடப்பட்டது. பல காலம், அறிவு சீவிகளின் பார்வையில் படாமல் இருந்த “வன்முறை பற்றிய மதிப்பபீடு.” பிரான்ஸ் நாட்டு தத்துவ மேதை தெரிதா அவர்கள் 1989 இக் கட்டுரையின் பங்களிப்பை அவரது உரையில் மேற்கோள் காட்டி பேசும் பொழுது, அறிஞர்களை வியக்க வைக்கிறது.
வால்டர் பெஞ்சமனனின் சொல்லடலில் மேல் குறிப்பிட்ட வன்முறை வகைமகளை உற்று நோக்குவோம். “தொன்ம வன்முறை சட்ட உருவாக்கம் செய்தால், தெய்வீக அல்லது வன்முறையற்ற வன்முறை சட்டத்தை அழிப்பது. முன்னது, எல்லைகளை தோற்றுவித்தால், பின்னது எல்லைகளை அழித்தோழிப்பது, தொன்ம வன்முறை குற்ற உணர்வையும், பழி வாங்குதலையும் உண்டாக்கினால், தெய்வீக அல்லது வன்முறையற்ற வன்முறை, செய்த தப்புகளுக்கு நியாயம் கற்பிக்காமல் நல் வழி தேடுவது. முன்னது அச்சுறுத்தினால், பின்னது தாக்குவது. முன்னது இரத்தம் சிந்தினால், பின்னது இரத்தம் சிந்தாமல் சாவு மணி அடிப்பது. …தொன்ம வன்முறை சுய நலனுக்கான, எதற்கும் பயனற்ற வாழ்க்கைக்காக அரங்கேறும் இரத்த அதிகாரம். தெய்வீக அல்லது வன்முறையற்ற வன்முறை என்பது அனைத்து உயிர்களின் நலனுக்கான, அவை வாழ்வதற்கான துய்மையான அதிகாரம்.முன்னது, தியாகத்தை கேட்பது, பின்னது, தியக்கத்தை எற்றுக் கொள்வது.” (பெஞ்சமன், 1921/1986, ப.292).
தொன்ம வன்முறையான சட்ட உருவாக்கம் பற்றி பெஞ்சமன் குறிப்பிடும் பொழுது, நாடுகளுக்கிடையே எற்படும் போர்கள் எவ்வாறு எல்லைகளை மறு வரையறை செய்கின்றன, பின்னர் இவ் வரையறைகள் எவ்வாறு சட்ட உருவாக்கங்கள் முலம் இரு நாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன என்று விளக்குகிறார். இது தொன்ம வன்முறையின் முதல் வகை, சட்ட உருவாக்க வன்முறை. அப்படி உருவான சட்டங்கள் அதே நிலையில் காப்பற்றப்பட் வேண்டும். இது தொன்ம வன்முறையின் இரண்டாம் வகை, சட்டங்களை பேணும் வன்முறை, இரண்டு தரப்பினரும் சட்டங்களுக்கு முன் சமம் என்று சொல்வது சட்டங்களை பேணும் வன்முறை. இங்கு பெஞ்சமின் மேற்கோள் காட்ட விழைவது, அனடோலி பிரான்ஸ் என்ற பிரேஞ்ச் எழுத்தாளர் கூறியது. “மாட்சிமை பொருந்திய சட்டத்தின் சம நிலைப் பார்வையில், எழைகளும், பணக்கார்களும் பாலங்களின் கீழ் உறங்க கூடாது. தெருக்களீல் பிச்சை எடுக்க கூடாது. ரொட்டி துண்டுகளை திருடக் கூடாது.”
இந்த இரண்டு வன்முறைகளும் இடை நீக்க நிலையை எட்டும் பொழுது தோற்றுவிக்கப்படுவன, காவல் வன்முறையும், மரண தண்டணை வன்முறையும் என்று பெஞ்சமின் கூறுகிறார். வால்டர் பெஞ்சமனனின் பார்வையில், அத்தருணத்தில் காவல் வன்முறை தனக்கான பிரேத்தியோக வெளியை உருவாக்கவது மட்டும் இன்றி, தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தானே சட்டமாக உருவாக்கம் பெறுகிறது. இத்தகைய சட்டங்கள், சாதரண காலத்தில் இயங்கும் சட்ட உருவாக்கம் மற்றும் சட்டப் பேணுதல் நிலைகளில் தோன்றுவன அல்ல.
இலட்சக்கணக்கில், சென்னை மெரினாவிலும் தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் மாணவர்களும், இளைஞர்களும், ஆண்களும், பெண்களும், குடும்ப அங்கத்தினர்களும் குவிந்து போது எமுந்த மக்கள் எழுச்சி, வால்டர் பெஞ்சமனனின் பார்வையில், தெய்வீக அல்லது வன்முறையற்ற வன்முறையாகும். 23 01 2017 அன்று போராட்டக்காரர்கள் எதிர்க் கொண்டது காவல் வன்முறையாகும். பெஞ்சமனனின் பார்வையில், தமிழகத்தின் தொன்ம வன்முறைகளான, சட்ட உருவாக்கமும், சட்ட பேணுதலும் இடை நீக்கம் பெற்ற காலமது. காவல் வன்முறை சட்டமாக உருமாறிய அசாதரணமான காலமது. காவல் அரசமைப்பு தொன்ம வன்முறை வகைமைகளுக்கு வெளியே உருவாவது.
எனது பார்வையில், 23 01 2017 அன்று நிகழ்ந்த சம்பவங்களின் ஆணி வேர்கள் கடந்த 40 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் ஊடே விளைந்தவை/வேருன்றியவை. கருணநிதி, எம் ஜி யார் மற்றும் செயலலிதா தமிழக காவல் துறையை தங்களது கைப்பாவையாக, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் அமைப்பாக வளர்த்தெடுத்தது கண்கூடு. பெஞ்சமனிய பார்வையில், தமிழக காவல் துறையின் தியாகத்தை அவர்கள் கேட்டார்கள், பெற்றார்கள், தமிழக மக்களின் மனித மீறல்களின் ஊடே.
எனக்கு நினைவு தெரிந்து, தமிழகத்தில் பல்வேறு காவல் வன்முறைகள், தொன்ம வன்முறைகளின் எல்லைகளுக்கு வெளியே அரங்கேறியுள்ன. 1992ல் அரங்கேறிய வாச்சாத்தி பழங்குடி மக்களுக்கெதிரான வன்முறை, 1999ல் நடந்த தமிரபரணி தலித் படுகொலைகள், 2011ல் நடந்த பரமக்குடி கலவரம், 2012ல் அரங்கேறிய இடிந்தக்கரை மீனவர்களுக்கான வன்முறை. ஆனால் மேற்குறிப்பிட்ட சம்பங்கள் அனைத்தும் 23 01 2017 அன்று, அடித்தட்டு மக்களான மீனவர்களும் பாட்டாளி மக்களும் வசிக்கும் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ரூதர்புரம் பகுதிகளில் தமிழக காவல் துறையின் வன்முறை ரூத் ரத்தாண்டவமாடியப்பொழுது பின் தள்ளப்பட்டன என்று கருதுகிறேன். 25 01 2017 அன்று காலை நானும்ம் சக இதழியல் பேராசிரியர்களும், ஆய்வு/முதுகலை மாணவர்களும் நடுக்குப்பம் சென்று பார்த்த காவல் வன்முறையினால் விளைந்த காட்சிகள், கேட்ட அழு குரல்கள், மீனவ பெண்களின் மன வலிகள், சிறுவர்/சிறுமிகளின் முகங்களில் காவல் வன்முறை தோற்றுவித்த அச்ச ரேகைகள் தமிழகம் பெஞ்சமனிய காவல் வன்முறை பாதையில் பயணிப்பதை மற்றோரு முறை உணர்த்தியது. தமிழகம் காவல் அரசமைப்பாக பெஞ்சமனிய தொன்ம வன்முறைகளை இடை நீக்கம் செய்து பயணிப்பதாக பார்க்க முடிந்தது.
நடுக்குப்பம் மக்களின் வாழ்வாதரமான, மீன் அங்காடி காவலர்களால் “பாஸ்பரஸ்” பொடி துவப்பட்டு தீக்கிரையானதாக, அங்கு நாங்கள் சந்தித்த 30 மீனவ பெண்களும் கூறினார்கள்.நான் முதலில் சந்தித்தவர், பிச்சம்மா. தனது 70 வயதில் இப்படிப்பட்ட் சோகத்தை தந்த காவல் வன்முறையை பார்க்கவில்லை என்றார். அவர் “தண்டல்” வட்டிக்கு வங்கி விற்பனை செய்ய வைத்திருந்த ரூபாய் 4000 மதிப்புள்ள மீன் கருகியது என்றார். நாகவள்ளி என்ற விதவை தனது இரண்டு மகள்களையும், மனைவியை இழந்த தனது அண்ணனின் இரு குழந்தைகளையும், தான் செய்யும் மீன் வியாபரத்தை நம்பி காப்பற்றுவர் தொடுத்த கண்டனங்கள்/கோள்விகள் எராளம். அவற்றில் முக்கியமானவை, “போலிஸ் தடியடிக்கு பயந்து ஒடி வந்த மாணவர்களுக்கு நாங்கள் தண்ணிர் கொடுத்தால், “தீவிர வாதியா/சமுக விரோதியா?”, “அவர்கள் போலிஸ் அல்ல, ரவுடிகள்”.
கடந்த பல நாட்களாக, “போலிஸ் வந்து கைது செய்யப் போகிறார்கள்” என்ற தகவல்களால் எங்களது மன அமைதி மற்றூம் துக்கம் போனது” என்றார்கள்.
இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தை அன்று கண்ட காவல் வன்முறை காட்சிகளால் ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறினார், அன்று முதல் தொடர்ந்து அழது கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவரது வீட்டில் 80 மற்றும் 90 வயது மதிக்கத் தக்க இரண்டு பாட்டிகளும் காவல் வன்முறைக்கு தப்பவில்லை என்றார் அந்த இளம் தாய். “பத்து போலிஸ்காரர்கள் நாங்கள் தடுத்தும் கேட்காமல் எங்களது வீட்டிற்குல் வேகமாக புகுந்தனர். பாட்டிகளின் மேல் தங்களது பூட்ஸ் கால்களை வைப்பதற்குள், எனது அம்மா பாய்ந்து சென்று எனது பாட்டிகளை காத்தார்.” சித்தாம்மா என்ற 80 வயது பாட்டி தனது அடிப்பட்ட கையைக் காட்டினார்.
55 வயது மதிக்கத் தக்க பூண்டு விற்பனை செய்யும் இந்திரா, தனியாக வாழ்பவர். அன்று இரத்தம் சொட்ட ஒடி வரும் மாணவர்களை மேலும் அடிக்க வேண்டாம் என்று கலங்கரை விளக்கம்/நடுக்குப்பம் சாலைச் சந்திப்பில் தடுத்ததால், அவரது வாழ்க்கை ஆதாரா கருவியாக செயலாற்றிய அவரது வலது கை/விரல்கள் மோசமாக தாக்கப்பட்டன. அவரது இரு கால்களிலும் கடுமையான காயங்கள். உங்கள் கூடப் பிறந்தவர்களுக்கு இச் சம்பவம் தெரியுமா என்ற பொழுது, அவர் கண்ணீர் மல்க சொன்னது, அவர்கள் வெளியுரில் இருக்கிறார்கள். கேள்விப்பட்டால், அழுது விடுவார்கள், அதனால் சொல்லவில்லை என்றார்.
சரமாரி அடி வாங்கிய பெரும்பாலோர் பெண்கள். அவர்களது உடல் காயங்களை விட அவர்களை அதிகம் பாதித்திருப்பது, காவல் வன்முறை சாத்தியப்படுத்திய மன உளைச்சல். அது அரங்கேற்றிய பாலியல் வன்முறை, ஆபாச வார்த்தைகளால், நா சொல்ல மறுக்கும் வார்த்தை பிரயோகங்களால் அரங்கேற்றப்பட்டது அந்த பாலியல் வன்முறை என்று நடுக்குப்பம் பெண்கள் வேதனைப்பட்டார்கள்.
கணெஷ் என்ற வண்ணம் தீட்டும் இளைஞர் வேலையில் இருந்து வீடு திரும்பும் போது சரமாரியாக தாக்கப்பட்டார். அவரது வார கூலியான ரூபாய் 3000 மற்றும் கைப்பேசி காவலர்களால் பிடுங்கப்பட்டது. அவரது தலையில் 8 தையல்கள். வேலை செய்யும் கைகளில் யானைக் கால் போன்ற வீக்கம். அவரை சுட்டிக் காட்டி அங்கு இருந்த மீனவ பெண்கள் எழப்பிய கேள்வி, “இவன் தீவிர வாதியா/சமுக வீரோதியா?”
எது காவல் அரசமைப்பு? மக்களுக்கும், அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்யும் சட்டங்களுக்கு எதிராக எவப்படும் காவல் வன்முறையால் விளைவது காவல் அரசமைப்பு.
எது காவல் அரசமைப்பு? கடந்த டிசம்பர் மாதம் சென்னை மக்கள் வெள்ளத்தில் மடிந்து கொண்டிருந்த 31ஆம் நாள் அன்றைய முதலமைச்சர் செயலலிதா தலைமை செயலகம் செல்லும் பாதையில் பத்து அடிக்கு ஒரு காவலர் என்று நூற்றுக்கணக்கான காவலர்கள் கொட்டும் மழையில் மக்களை மறந்து நின்றது.
எது காவல் அரசமைப்பு? கடந்த 40 வருடங்களாக ஆட்சியாளர்களின் சுய நலத்திற்காக, இந்திய காவல் பணியில் சேர்ந்த அதிகாரிகளும், அவர்களது கிழ் நிலை உழியர்களும் ஒரே உயிரனமாக செயல்பட்டு அடித்தட்டு மக்களையும் அவர்களை ஆதரிக்கும் அமைப்புகளையும் தொடர்ந்து காயப்படுத்தியது காவல் அரசமைப்பின் அடையாளம். சர்வாதிகார நாடுகளில் மட்டும் தோன்றுவது அல்ல, காவல் அரசமைப்பு. இந்தியாவிலும், அதன் மாநிலமான தமிழ் நாட்டிலும் அது சாத்தியம் என்று சொல்வது தான் மேற்ச் சொன்ன உதாரணங்கள்.
எது காவல் அரசமைப்பு? பாரதிதாசன் சமுக முன்னேற்ற காலம் என்று குறிப்பிட்டது, மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலரும் காலத்தை. இதை பொய்யாக்குவது காவல் அரசமைப்பு. மக்களாட்சியை போர்வையாக மாற்றி, பெஞ்சமனின் பார்வையில், தொன்ம வன்முறைகளான சட்ட உருவாக்கம் மற்றும் சட்ட பேணுதல் நிலைகளை இடை நீக்கம் செய்து, காவல் வன்முறை முலம் ஆட்சியாளார்கள் மூலம் அரங்கேறுவது.
மீனவர்களும் பாட்டாளி மக்களும் வசிக்கும் நடுக்குப்பம், மாட்டாங்குப்பம், ரூதர்புரம் பகுதிகளில் தமிழக காவல் துறை சாத்தியப்படுத்திய வன்முறை, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புக்கும், அந்த சாசனம் அனைத்து இந்தியர்களுக்கும் அளிக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது. நமது நாட்டுக்கும், மாநிலத்திற்கும் தீராக் களங்கத்தை எற்படுத்தியது.
மர்ட்டின் லூதர் சொன்னதை தமிழக காவல் துறை செவி மடுக்க வேண்டும், “வெறுப்பு, வெறுப்பை உருவாக்கும், வன்முறை, வன்முறையை உருவாக்கும்.கடுமையான போக்கு, மேலும் கடுமையான போக்கை அளிக்கும். நாம் வெறுப்பை தொடுக்கும் எதிரிகளை அன்பால் எதிர்க் கொள்வோம்.”
மறுபடியும் தமிழக காவல் துறை வன்முறையை அப்பாவி மக்கள் மேல் பாய்ச்ச விடாமல், பெஞ்சமனின் தொன்ம வன்முறை வகைமகளான சட்ட உருவாக்கம் மற்றும் சட்ட பேணுதல் நிலைகளை செம்மைப்படுத்துதல் மூலம் ஆட்சியாளார்களும், நீதித் துறையும் காக்க வேண்டும்.
பேராசிரியர் கலாநிதி கோ. இரவீந்திரன், துறைத்தலைவர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை. சென்னைப் பல்கலைக்கழகம்.
References
1.Benjamin, Walter (1986), “Critique of Violence” in Reflections:Essays, Aphorisms and Autobiographical Writings, Schocken Books, New York.
2.The Hindu, (2017), “Extremists Incited Violence” Available at http://www.thehindu.com/news/
3.Zizek, Slavoj (2015), “Divine Violence in Ferguson,” The European, Available at http://www.theeuropean-