191
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என வீதிகளில் இறங்கிப் போராடி களைத்து, விரக்தியின் விளிம்பிற்குச் சென்றிருந்த காணாமல் போனோரின் தாய்மார்கள் 14 பேர் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல தரப்பினரையும் உலுப்பியிருக்கின்றது.
வடக்குகிழக்குப் பிரதேசங்களில் கைது செய்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் தாய்மார்கள் சிலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கம் என்ற பெயரில் ஒன்றிணைந்தனர்.
அதனை ஓர் அமைப்பாக உருவாக்கி, காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, அவர்களைக் காணாமல் ஆக்கியது யார், எதற்காக இது நடைபெற்றது, அவர்கள் என்ன ஆனார்கள் என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உரிய பதில்களைத் தேட முற்பட்டிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கியமமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும், இந்த அப்பபட்டமான மனித உரிமை மீறல்களுக்கு அரசு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாகத் தாங்களாகவே போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் போராட்டங்களின் உச்ச வடிவமாகவே ஜனவரி 23 ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். விசாரணைகளின்றி பல வருடங்கள் தொடர்ச்சியாக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகத் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அன்றைய தினம் காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில்; உருக்கமானதொரு வழிபாட்டில் அந்தத் தாய்மார்கள் 14 பேரும் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களோடு அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
ஒரேயொரு தேங்காயுடன் ஆலயத்தைச் சுற்றி வந்து அதனை ஒரு தாயார் உடைத்தார். அந்த வழிபாடு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. தாய்மார்களின் கண்கள் குளமாகியிருந்தன.
மனம் உருகி அவர்கள் பிரார்த்தனை செய்ததை உணரவும், தமது பிள்ளைகள் எப்படியாவது உயிருடன் திரும்பி வரவேண்டும் என்று முருகப் பெருமானிடம் வேண்டியதை மானசீகமாகக் கேட்கவும் முடிந்தது.
ஆலய வழிபாட்டின் பின்னர் ஒரேயொரு பதாதையுடன் அவர்கள் ஊர்வலமாக ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மணிக்கூட்டுச் சந்தியில் திரும்பி ஏ9 வீதியில் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு எதிரில் தமது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.
அப்போது, அவர்கள் வீதியோரத்தில் நிலத்தில் இருப்பதற்குக்கூட எந்தவிதமான முன்னேற்பாடும் இருக்கவில்லை.
இந்த உண்ணாவிரதத்தை எவ்வாறு முன்னெடுப்பது, எந்த வகையில் நகர்த்தி கொண்டு செல்வது என்ற முன் ஆயத்தங்கள் எதுவும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதற்குத் துணிந்திருந்தவர்களிடம் தயார் நிலையில் இருக்கவில்லை.
செல்லும் திசையறியாது ஆரம்பிக்கப்பட்ட ஒரு போராட்டமாகவே அது ஆரம்பத்தில் தோன்றியது.
ஆனாலும் அந்தத் தாய்மார்களின் இதயங்களில் ஒரேயொரு தீர்மானம் மாத்திரம் இரும்பையொத்த உறுதியுடன் மிகுந்த வைராக்கியத்துடன் உருண்டு திரண்டிருந்தது. உயிர் போவதைப் பற்றிக் கவலையில்லை. எங்களுக்கு எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் வரையில் நாங்கள் சோரப் போவதில்லை என்ற எண்ணமே உயர்ந்து மேலோங்கியிருந்தது.
எந்தவிதமான அரசியல் பின்னணியும் அற்ற நிலையில் எவருடைய உதவிகளையும் முன்கூட்டியே எதிர்பாராத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து செயற்படுவதற்காக அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு ஒரு குழு உருவாக்கப்பட்டு சில உதவிகள் செய்யப்பட்டன.
கந்தசாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக வந்த தாய்மார்கள் கால் கடுக்க அஞ்சல் அலுவலகம் உள்ள பக்கமாக அதன் எதிரில் நின்று கொண்டிருந்தார்கள். வீதிக்கு அப்பால் வவுனியா தலைமையக பொலிஸ் நிலையம்.
எனவே அங்கு, எந்த இடத்தில் அவர்கள் அமர்வது என்பது தீர்மானிக்கப்பட்டு சில பாய்களும் தறப்பாள்களும் கொண்டு வரப்பட்டன. அவற்றை விரித்து அவர்கள் அமர்ந்த நேரம், அதற்கான அனுமதியை பொலிசாரிடம் இருந்து பெற வேண்டியிருந்தது.
பொலிசார் அந்த அனுமதியை வவுனியா நகரசபைதான் அதறக்hன அனுமதி வழங்க வேண்டும் என்றார்கள். நகரசபை அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில்தான் சாகும்வலையிலான அந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.
திடீர் திடீரென மழை கொட்டிக் கொண்டிருந்த நேரம். உண்ணாவிரதம் இருந்தவர்கள் நிலத்தில் அமர்ந்திருந்தார்கள். எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்ற நிலையில்தான் அவசர அவசரமாக கொட்டில் போடப்பட்டது.
எதிர்பார்த்தபடியே மழையும் பெய்தது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் வீதிவழியாகவும் ஓரத்திலும் நிலத்தில் ஓடிவந்த மழை நீரில் நனையாதிருப்பதற்காகக் கதிரைகள் கொண்டு வரப்பட்டன.
அதன் பின்னர்தான் மேடை அமைப்புக்குப் பயன்படுத்தப்படுகின்ற வாங்குகள் போன்றவை கொண்டு வரப்பட்டு, அதில் அவர்களை அமரச் செய்தனர். இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்காக ஒரேயொரு அரிக்கன் லாம்பு அந்தக் கொட்டிலின் முன்பக்கத்தில் தொங்க விடப்பட்டது.
மின்சார இணைப்பு கிடைக்குமா என்று மின்சார சபையினரிடம் கேட்டபோது, அதிகாரபூவர்வமாகத் தரமுடியாது என்று அவர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதன் பின்னர் கண்டும் காணாத நிலையில் ஏதோ ஒரு வகையில் மின் இணைப்பு பெறப்பட்டு இரண்டு லைட்டுகள் எரியவிடப்பட்டன.
இதற்கிடையில் வவுனியா நகரசபையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரும், தங்களுடைய அனுமதியின்றி உண்ணாவிரதம் இருப்பவர்கள் அந்த இடத்தில் பொதுமக்களுக்கும் பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தத் தக்க வகையில் கூடியிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு பதிவு செய்ததாகவும் ஒரு தகவல். அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சாகும் வரையிலான உண்ணாவிரதம் என்பது எவ்வாறு இடம்பெறப் போகின்றது, அதற்கு எதிராக எவரேனும் அதிகாரிகள் குறிப்பாக பொலிசாரோ அல்லது அரச புலனாய்வாளர்களோ ஏதேனும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கக் கூடுமோ, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொதுவாக வெளியில் எல்லோருடைய மனங்களையும் கௌவியிருந்தது.
ஆனால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் மனங்களில் வெளிவிடயங்கள், சுற்றுச் சூழல் நிலைமைகள் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் இருக்கவில்லை. தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்பை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுடைய மனங்களை தீவிரமாக ஆக்கிரமித்திருந்தது.
இத்தகைய ஒரு சூழலில்தான் வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் முன்னெடுத்திருந்த சாகும் வலையிலான உண்ணாவிரதம் உருவாகி செயற்பட்டது,
அதேநேரம், அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒத்துழைப்பதற்கு வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் முன்வந்தனர். வவுனியா வர்த்தகர் சங்கம், பல்வேறு இளைஞர் அமைப்புக்கள், இளைஞர் யுவதிகள், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காணமாமல் போயுள்ளவர்களின் தாய்மார்களும் தந்தையரும் இரத்த உறவினர்களும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போன்று கிளம்பி வந்திருந்தார்கள்.
மிகவும் அமைதியாக ஆரம்பமாகிய இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாள் தீவிரம் பெற்றது. சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கின்றார்கள் என்ற தகவல் வெளிப்பட்டதையடுத்து, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஆதரவாக அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காணாமல் போனவர்கள் தொடர்பில் அக்கறையும் கரிசனையும் கொண்டிருந்த பலர் வவுனியா நோக்கி உதிரிகளாகவும் குழுக்களாகவும் படையெடுக்கத் தொடங்கினர்.
முதலாவது நாளே நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் உண்ணாவிரதம் இருந்தவர்களை, நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். அவர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து ஒத்துழைத்தனர். பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உரம் சேர்த்தனர்.
நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் வவுனியா உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பியதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள பாராமுகமான நடவடிக்கைகள், அணுகுமுறைகள் குறித்து காரசாரமான கேள்விகளை எழுப்பினர். கடுமையாக சாடினர்.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக பல அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களுக்கு மத்தியில் வாக்களித்த மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்திருப்பது குறித்து இவர்கள் இடித்துரைத்தனர்.
சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்ற தாய்மார்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்து வவுனியாவில் இடம்பெறுகின்ற உண்ணாவிரதப் போராட்டம் குறித்து எடுத்துரைத்திருந்தார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருப்பவர்கள் தண்ணீர்கூட அருந்தாமல் கடும் விரதத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களில் மூவரின் உடல் நிலை மோசமடைந்து செல்வதாகவும் எடுத்துரைத்திருந்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்குமேயானால், வடக்கு கிழக்குப் பிரதேசம் எங்கும் போராட்டங்கள் வெடிக்கும் நிலைமைகள் மோசமடையும். அத்துடன் உண்ணாவிரதம் இருக்கின்ற வயதான தாய்மார்களில் எவருக்கேனும் ஏதேனும் நடந்தால், அதுவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும். எனவே நிலைமைகள் கட்டுக்கடங்காமல் மீறிச்செல்வதைத் தடுக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறியிருந்தார்.
கணாமால் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் உடனடியாகப் பதில்; சொல்ல வேண்டும். ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டன.
பாதிக்கப்பட்டவர்களும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் விரக்தி அடைந்திருக்கின்றார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதையாவது தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த பிரதமர், அதனை தாங்கள் எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பியதுடன், முன்னைய அரசாங்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி தங்களால் எதையும் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.
அப்படியானால், கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.
எனவே. அரசாங்கத்திடம் இருக்கின்ற பெயர்ப்பட்டியலையாவது வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த பிரதமர், சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறினார்.
அதேநேரம் நல்லெண்ண நடவடிக்கையாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருசிலரையாவது அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். அந்த நடவடிக்கைகூட சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சிறிய அளவிலாவது ஆறுதல் படுத்துவதாக அமையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதமரிடம் எடுத்துரைத்திருந்தார்.
ஆனால் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நடத்தப்பட்டு வருகின்ற போராட்டங்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்கள். இராணுவத்தினர் அவர்களை இரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் காணாமல் போனவர்களில் பலர் உயிருடன் இல்லையென்றே தான் நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அததுடன், காணாமல் போயுள்ளவர்களில் பலர் வெளிநாடு சென்றிருப்பதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் எனவே, அவர்களை இலங்கையில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்லாமல் தமிழ் மக்களையும் குறிப்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களையும் முகம் சுழிக்கவும், சீற்றமுறவும் செய்திருந்தது.
எனினும் உண்ணாவிரதம் இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதத்தின் நான்காவது நாளாகிய வியாழக்கிழமை அமைச்சர் சுவாமிநாதன் வவுனியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் தமது சங்கத்தின் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஆகிய மூவருக்கும் நேரடியாக எழுதிய கடிதத்தின் மூலம் தமது சாகும் வரையிலான உண்ணாவிரதம் பற்றியும், கோரிக்கைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்திருந்தனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும். கைவிடப்படமாட்டாது என்பதையும் சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.
ஆனால், அவர்களிடமிருந்து நேரடியாக எந்தவிதமான பதிலும் வரவில்லை. அதேநேரம், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியாவில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலை மோசமடைந்து செல்கின்றது. இது குறித்து ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேச்சுக்கள் நடத்தி, ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு கேளுங்கள் என கேட்டிருந்தார்.
அதனையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆயினும் உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாக வந்து பார்வையிடுமாறு கேட்டிருந்த போதிலும், வேலைப்பளு காரணமாக அதனை உடனடியாகச் செய்ய முடியாதிருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தவாறு, அமைச்சர் சுவாமிநாதன் வவுனியாவுக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன வியாழனன்று மாலை வவுனியாவுக்கு திடீரென விஜயம் செய்து உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அந்தப் பேச்சுவார்த்தைகள் நீண்ட நேரம் நடைபெற்றது,
உண்ணாவிரதம் இருந்தவர்கள் தமது உள்ளக்கிடக்கைகள் கவலைகள் துயரங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தயக்கமின்றி எடுத்துரைத்தார்கள். அரசாங்கத்தின் நிலைமைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார்.
அதேவேளை, பாதிக்கப்பபட்டவர்களின் கருத்துக்களையும் அவர்கள் கூறிய அனைத்து விடயங்களையும் மிகவம் பொறுமையாக அவர் கேட்டறிந்து கொண்டார். இருந்தாலும் உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீரவு காண்பது மிகவும் கடினம் என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினை குறித்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்கள் நடத்தவும், விசாரணைகள் செய்யவும் இரண்டு வாரம் கால அவகாசம் தேவை என குறிப்பிட்டார். அந்தக் காலப்பகுதியில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட உயர் மட்டத்தினருடனும், பிரதமருடனும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் பிரதிநிதிகள் நேரடியாகப் பேச்சுவார்த்கைள் நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யமுடியும் என ராஜாங்க அமைச்சர் கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலமாக அளிக்கப்படுகின்ற வாய்மொழி மூலமான உறுதிமொழியை ஏற்க முடியாது. அதற்கான உத்தரவாதம் எழுத்து மூலமாக வரையறுக்கப்பட்ட திகதியுடன் உறுதியளிக்கப்பட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த தாய்மார்கள் கூறியதை ஏற்று அதற்கமைவாக ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விகட்ர் சோசை உள்ளிட்ட அருட்தந்தையர்களின் முன்னிலையில், அவர்களால் தமிழில் எழுதப்பட்ட உறுதிக் கடிதத்தில் கையொப்பமிட்டார்.
அதனையடுத்து, உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதற்கமைவாக பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான 16 பேருடன் அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினர் அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளார்கள்.
கணாமால் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை என்பது சாதாரண பிரச்சினையல்ல. அது மிகவும் தீவிரமானது. மோசமான மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் மோசமான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலுமாகும்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாட்டில் சிக்கித் தவிக்கின்ற அரசாங்கம் காணாமல் போயிருப்பவர்கள் பற்றி வெளியிடுகின்ற கருத்துக்கள், எதுவானாலும், அது போhர்க்குற்றச் செயல் தொடர்பான ஒப்புதல் வாக்குமூலமாகப் பயன்படுத்தக் கூடியதாகவே இருக்கும்.
உரிமை மீறல் என்ற கோணத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கி;ன்ற அதேவேளை, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற விடயமானது பரந்து பட்டதாகவும் பல்வேறு வகைப்பட்;டதாகவும் இருக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், பாடசாலை நிகழ்வொன்றில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்ற நான்கு சிறுமிகள் பாடசாலை சீருடையுடன் ஏனைய மாணவிகள் சகிதம் அவருடன் காணப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், அவர் ஜனாதிபதி வேட்பாளராக இருநதபோது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்திலும் அந்த மாணவிகள் காணப்படுகின்றனர். இதுபற்றி அவர் ஜனாதிபதியாகிய பின்னர் நேரடியாக எடுத்துக் கூறி முறையிடப்பட்டிருந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களில் வேறு சிலர், அரச தரப்பினருடன் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றிய ஆதாரங்களும் ஏற்கனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டனவா, விசாரணை அறிக்கைகள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இரண்டு வார காலப்பகுதியில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கத் தரப்பினர் எடுக்கப் போகின்றார்கள். சிக்கல்கள் நிறைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணப்படும் என்பது தெரியவில்லை.
ஆயினும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய கடினமானதோர் அரசியல் நிலைமையை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள நிலையில் சாகும் வரையிலான வவுனியா உண்ணாவிரதம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக நடந்தேறியிருக்கின்றது.
அரசாங்கத் தரப்பில் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அளித்துள்ள உறுதிமொழிக்கு அமைவாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா அல்லது சாக்குப் போக்கு கூறி இழுத்தடிக்கப்படுமா என்று தெரியாது.
ஆனால், நீர்கூட அருந்தாமல் சில தாய்மார்கள் நான்கு நாட்கள் மேற்கொண்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் களம் என்ற பரப்பைக் கடந்து, மனிதாபிமானம், மனித உரிமைகள் என்ற தளத்தில் விசுவரூபமெடுத்து, நல்லாட்சி அரசாங்கத்தை கிடுக்கிக்குள் சிக்க வைத்திருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது
Spread the love