குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த மாதம் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஆட்சியை கைப்பற்றுவதாக மஹிந்த ராஜபக்ஸ பிரச்சாரம் செய்திருந்தார் எனவும் எனினும் அவரினால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போது எதிர்காலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதாக அறிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை கைப்பற்றுவதற்கு உதவும் நோக்கில் தாம் ஒரு வார காலம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் ஆட்சி கைப்பற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எவருக்கும் ஆட்டம் போட இடமளிக்கப் போவதில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் காணப்பட்டதாகவும் தாமும் ஜனாதிபதியும் இணைந்து பொருளாதாரத்தை மீட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.