குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வீசா உடையவர்கள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படும் வகையில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இட்ட உத்தரவிற்கே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் ட்ராம்பின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தது. சுமார் 100 முதல் 200 வரையிலான பேர் விமான நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ராம்பின் தீர்ப்பிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கவும் டொனால்ட் ட்ராம்ப் தற்காலிக தடை விதித்துள்ளார். உரிய வீசா இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாது என ட்ராம்ப் அறிவித்துள்ளார்.