அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மசூதி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் விக்டோரியா நகர மசூதி ஒன்றிற்கு சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் இனம்தெரியாதோர் தீ வைத்துள்ளனர். மசூதியில் இருந்து புகை வெளிவருவதை அவதானித்த ஒருவர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நான்கு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் மசூதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மசூதியில் தீ பிடித்தால் எச்சரிக்கும் எச்சரிக்கை மணியை முன்னரே திட்டமிட்டு செயல் இழக்க வைத்துள்ளதாகவும்,, கதவை திறந்து வைத்ததாகவும் இமாம் ஹஸ்மி தெரிவித்துள்ளார்.
2000ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதியில் கடந்த 21ம் திகதி கொள்ளை சம்பவம் நடந்தது. மசூதிக்குள் புகுந்த இனம் தெரியாதோர் கையடக்க கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம்கள் மீதான வெறுப்பு காரணமாக இந்த மசூதி குறிவைக்கப்பட்டது. 7 முஸ்லீம் நாட்டு மக்கள் அமெரிக்காவுக்கு செல்லதடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.