வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டின் நினைவு கூரும் நிகழ்வு
வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, மன்னார்
30.01.2017 அன்று காலை 9.30 மணிக்கு
பிரதம அதிதியுரை
குருர் ப்ரம்மா ……………..
தலைவரவர்களே, சிறப்பு அதிதிகளே, எனதருமைச் சகோதர சகோதரிகளே,
சோகமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளேன். இதன் தாற்பரியத்தை எதிர்க்கட்சித் தலைவர் கூறியதும் தேகசுகம் மறந்து, பயணத்தூரம் மறந்து இங்கு வந்துள்ளேன். 30.01.1985 அன்று 32 வருடங்களுக்கு முன்னர் இங்கு உயிர் நீத்த சகலரின் ஆத்மாக்களும் சாந்தி அடைவதாக என்று பிரார்த்தித்துக் கொண்டு என் பேச்சைத் தொடங்குகின்றேன்.
இலங்கை அரச படைகளை நோக்கி இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளனர். இரக்கமின்றிச் சுட்டுக் கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்று வந்துள்ளனர். அதனால்த்தான் எமது வடமாகாணசபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 10.02.2015ல் இயற்ற வேண்டி வந்தது.
இங்கினியாகல என்ற இடத்திலேயே ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வந்த உடனேயே 1956ம் ஆண்டு ஜூன் 5ந் திகதி தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடங்கியது. பின்னர் 1958ம் ஆண்டின் கலவரங்கள் எமது மக்களை தமது சகல உடைமைகளையுந் துறந்து தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி ஓடச் செய்தது. இன்றும் அவர்கள் விட்டு வந்த காணிகள் பல அவர்கள் பெயரிலேயே இருக்கின்றன. நீண்ட கால ஆட்சி உரித்து உறுதிகள் எழுதி வெளியார்கள் அவற்றை இன்று ஆண்டு அனுபவித்து வருகின்றார்கள்.
அதன் பின்னர் 1961ல் கலவரங்கள் நடந்து 1974ம் ஆண்டில் ஜனவரி 10ந் திகதியன்று தமிழராட்சி மகாநாட்டில் மனிதப் படுகொலை நடைபெற்றது. 1977இலும் 1981இலும் இனக்கலவரங்கள் மனித உயிர்களைப் பறித்தன. 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 1ந் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.
1983ல் நடந்த இனக்கலவரம் எம் மக்கள் பலரை சகலதையும் இழந்து கடல்கடந்து செல்ல வைத்தது. தெற்கில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்கள் பலர் கடல் கடந்து வாழ்கின்றார்கள். தெற்கின் குடிப்பரம்பல் அவ்வாறு வெளியேறிய தமிழ் மக்களின் பெயர்களை மறைத்தே இன்று கணிக்கப்படுகின்றன. தமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு காணிகள் வைத்து வியாபாரங்களை நடாத்தி, அரச சேவைகளில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது இன்று மறந்து போன விடயமாகிவிட்டது. நானறிய திஸ்ஸமகாராமாவின் அரைவாசி நெற்காணிகள் தமிழ்ச் சகோதரர்கள் இருவரின் பெயர்களில் இருந்தன. அவர்களின் உறவினர் ஒருவர் இன்று ஆந்தரப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார். 1983ல்த் தான் திருநெல்வேலி படுகொலை நடந்தது. பின்னர் 1984ம் ஆண்டில் சாம்பல்த் தோட்டப் படுகொலையும், சுண்ணாகம் படுகொலையும், மதவாச்சி – இரம்பாவைப் படுகொலையும், திக்கம் பருத்தித்துறைப் படுகொலையும், ஒதியமலைப் படுகொலையும், குமுழமுனைப் படுகொலையும், செட்டிக்குளம் படுகொலையும், மணலாறு படுகொலையும், மன்னார் படுகொலையும், கொக்கிளாய் கொக்குத் தொடுவாய் படுகொலையும் நடந்தேறின. வங்காலை கிறீஸ்தவாலய படுகொலை முள்ளியவளை படுகொலை ஆகியன முறையே 1985ம் ஆண்டு ஜனவரி 6ந் திகதியன்றும் ஜனவரி 16ந் திகதியன்றும் நடந்தேறின.
அவ்வருடம் ஜனவரி 30ந் திகதி தான் வட்டக்கண்டல் படுகொலை இங்கு நடைபெற்றது. தொடர்ந்து இவ்வாறான படுகொலைகள் பல நடைபெற்று வந்துள்ளன.
அவற்றுள் கிழக்கிலங்கை கொக்கட்டிச் சோலைப் படுகொலை 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ந் திகதி கொடூரமாக நடந்தது. நேற்றைக்கு முன்தினமே அக்கொடூரத்தின் முப்பதாம் வருட நினைவு நாள். 1987 ஆம் ஆண்டில் ஜனவரி 28, 29 மேலும் 30ந் திகதி ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடாத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். 150க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் படுகொலையில் கொல்லப்பட்டனர். வீட்டுக்கு வீடு மரணம். கொன்றொழிக்கப்பட்டவர்கள் யாவரும் உறவினர்கள்.
ஒரே வீட்டில் பலர் கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும் பலரைச் சிறைப்பிடித்த அதிரடிப் படையினர் அவர்களை மிகவும் மோசமாகச் சித்திரவதை செய்து துடிதுடிக்கக் கொன்று போட்டார்கள். அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர். எனினும் உயிர் தப்பிய சிலரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான கொடூரமான படுகொலைகளுக்காய் நீதிக்குக் காத்திருந்து 30 வருடங்கள் கடந்து விட்டது. வட்டக்கண்டல் படுகொலைக்கான நீதியைக் காத்திருந்து 32 வருடங்கள் கடந்து விட்டன.
முதன் முதலில் 1956ந் திகதி இங்கினியகல என்ற இடத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பந்தமாக அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுத்திருந்தால் வட்டக்கண்டல் படுகொலை மட்டுமல்ல மற்ற எந்தப் படுகொலையும் நடைபெற்றிராது. தொடர்ந்து நடந்த படுகொலை அனைத்தையும் மூடி மறைத்து தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்த்தான் திரும்பத் திரும்ப படுகொலைகள் நடைபெற்றன. அப்படுகொலைகளை நாங்கள் இனப்படுகொலை என்று அடையாளங் காண வேண்டி வந்தது ஏனெனில் அவை ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை அழிப்பதாக அமைந்ததாலும் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அவற்றை அனுமதித்து ஒப்புதல் அளித்தமையாலேயேயாகும். இவ்வாறான அரச அசிரத்தையே அவர்களைக் காட்டிக் கொடுத்து நடந்தவை வெறும் படுகொலையன்று இனப்படுகொலையே என்று எங்களைத் தீர்மானிக்க வைத்தது.
1985ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந் திகதியன்று அப்பாவி மக்களை காட்டு மிருகங்களைச் சுடுவது போலச் சுட்டு 52 பேரின் உயிர்களை அன்றைய தினம் வட்டக்கண்டலில் தள்ளாடி முகாமிலிருந்து வந்த அரச படையினர் பறித்துக் கொண்டார்கள். வட்டக்கண்டல் அரச தமிழ்க் கலவன் பாடசாலையின் அதாவது இந்தப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று 18 பேரை பாடசாலைக்குள் வைத்தே சுட்டுக் கொன்றார்கள். அதன் பின்னர் வயல்களிலும் வரும் வழிகளிலும் இருந்த அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்றார்கள். 40 பேர் காயமடைந்தார்கள்.
இதில் மிக வருத்தத்திற்குரிய கொடூரமான நிகழ்வு என்னவென்றால் ஆறு மணித்தியாலங்கள் இங்கிருந்து மக்களை வான் வழியாகவும் நில வழியாகவும் சுட்ட பின்னர் மதியம் 2 மணியளவில் அத்தனை பிரேதங்களையும் வாகனங்களில் ஏற்றித் தமது முகாமுக்கு எடுத்துச் சென்றதேயாகும். உற்றார் உறவினர் உடல்களைப் பார்க்க முடியாது போய்விட்டது. சமயச் சடங்குகள் பிரேதங்கள் இன்றியே நடைபெற வேண்டியிருந்தது. எனினும் சுட்டதையும் கொன்றதையும் கண்டவர்கள் இருந்திருக்கின்றார்கள். பொலிசார் விசாரணை செய்திருந்தால் குற்றவாளிகளை அடையாளம் காணக் கூடியதாக இருந்திருக்கும். பொலிசார் வெளியே வரவுமில்லை. பின்னர்தானும் விசாரணைகளை நடத்தவுமில்லை. அரசாங்கம் ஆணைக்குழுக்கள் அமைத்து உண்மையை அறிந்து கொள்ள விழையவுமில்லை.
1983ம் ஆண்டு கலவரத்தின் போது நான் மல்லாகம் நீதிபதியாக இருந்தேன். பலரைச் சுட்டுக் கொன்றுவிட்டு இராணுவத்தினர் தப்பி ஓடிவிட்டதாக எனக்குத் தகவல் வந்தது. பொலிசாருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். ஏன் மரணவிசாரணைகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கேட்டேன். தமக்கு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று மேலிடத்து உத்தரவு தரப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள். இறந்தவர்களின் பிரேதங்கள் கவனிப்பார் அற்று தெருக்களில் கிடந்தன. பொலிசார் இல்லாமல் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. ஏதோ ஒரு யுக்தி என்னை வழிநடத்தியதால் உடனே பொலிசாரிடம் கேட்டேன் ‘இராணுவம் சம்பந்தமான குற்றங்கள் தொடர்பாகத்தானே உங்களை வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்?’ என்று. ‘ஆம்’ என்றார்கள். உடனே நான் ‘இராணுவத்தினர் சம்பந்தமாகத்தானே உங்களுக்குத் தடை இருக்கின்றது. இராணுவ உடையணிந்தவர்கள் சம்பந்தமாக அல்லவே’ என்றேன். அவர்கள் ‘இல்லை’ என்றார்கள்.
‘அப்படியானால் இராணுவ உடை அணிந்தவர்கள் பற்றி மரணவிசாரணையில் வெளிவந்தால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை அல்லவா’ என்றேன். ‘ஆம்! ஆட்சேபணை இல்லை’ என்றார்கள். பொலிசாரை வரவழைத்து குறித்த பிரேதங்கள் சம்பந்தமாக மரணவிசாரணை நடத்தினேன். அதில் இராணுவத்தினர் என்று குறிப்பிடாமல் இராணுவ உடையணிந்தவர்கள் என்று குறிப்பிட்டு அதே நேரத்தில் அவர்கள் பயணஞ் செய்த வாகனங்களின் இலக்கங்களையும் மரணவிசாரணை அறிக்கையில் உள்ளடக்கி விட்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து இதுபற்றி ஆராய வந்த ஒரு சட்ட விரிவுரையாளர் வாகனங்களின் இலக்கங்களைப் பெற்று கொழும்பு சென்று மேட்டார் வாகனப் பதிவுக்காரியாலயத்தில் அவை இராணுவ வாகனங்களே என்று அடையாளம் கண்டு அத்தகவலை ருசுப்படுத்தி, அன்று கொலைகளைச் செய்தவர்கள் இராணுவத்தினரே என்று உலகறிய நிரூபித்து விட்டார். இதனால் கொழும்பில் நான் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் சிரேஷ;ட சட்டத்தரணி சகோதரரால் கடிந்து கொள்ளப்பட்டேன். அந்தக் காலங்களில் பதவியில் இருந்த நாங்களே பலத்த நெருக்குதல்களுக்கு ஆளாகி இருந்தோம். அப்படியானால் பொதுமக்களின் கதியை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறான இனப்படுகொலைகள் பல தொடர்ந்து வட்டக்கண்டலுக்குப் பிறகும் நடந்து 2009ம் ஆண்டின் யுத்த இறுதிக் காலகட்டத்தில் எம்மக்களுக்குச் சொல்லொண்ணாக் கொடூரங்கள் இழைக்கப்பட்டன. அதற்காகத்தான் தற்போது போர்க்குற்ற விசாரணை ஜெனிவாவில் இருந்து முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்தக் கால கட்டங்களில் மதகுருமார் பலர் அவர்கள் சமயம் சார்ந்தவர்கள் என்று தெரிந்து கூடக் கொல்லப்பட்டார்கள். 2009ம் ஆண்டு மேமாதம் 18ந் திகதி வரையில் இவ்வாறான படுகொலைகள் நடைபெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி 2009ம் ஆண்டு மே மாதத்தில் இராணுவ முகாமிற்குக் கொண்டு வரப்பட்டு முகாமின் படைத்தலைவராலேயே கற்பழிக்கப்பட்டார். கேட்போர் இன்றி கொலை, கற்பழிப்பு, சித்திரவதையாகியன தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் 2015ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான இணக்கப் பிரேரணையை ஏற்றுக் கொள்ள முன்னரே நான் அவர்களுக்கு 09.09.2015 அன்று ஒரு கடிதம் அனுப்பி பின்வரும் விடயங்களை வலியுறுத்தியிருந்தேன் –
01. போர்க்குற்றங்கள் எங்கள் சட்டத்தில் குற்றங்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவற்றை ஏற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு எங்கள் அரசியலமைப்பின் 13 (6)ம் ஷரத்தை பாவிக்க முடியும் என்று கூறியிருந்தேன்.
02. உள்ளூர் நீதிமன்றங்கள் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த திறமை, ஆற்றல் அற்றவை. நீதிபதிகள் இனரீதியான மனப்பாங்கு கொண்டவர்கள். ஆகவே சர்வதேச உள்ளீடுகளுடன் நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும். தகுதியான திறமைவாய்ந்த, பக்கசார்பற்ற சர்வதேச நீதிபதி ஒருவரே குறித்த நீதிமன்றத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். அவர் மற்றைய உள்ளுர் நீதிபதிகளின் கருத்துக்களை மறுத்தொதுக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
03. எமது சட்டத்துறைத் தலைமையதிபதி வழக்கு நடத்துநராக நியமிக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறி அதற்கான காரணங்களையும் கூறி வைத்தேன்.
04. போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான நீதிமன்ற செலவுக்கான நிதியம் எங்கிருந்து எவ்வாறு வர வேண்டும் எவ்வாறு வரப்படாது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
05. மேலும் குறித்த குற்ற விசாரணையின் பின்னரான மேன்முறையீடு பற்றிக் கூட எழுதியிருந்தேன்.
இவற்றைப் பெற்றதாக பின்னர் எம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது உயர்திரு இளவரசர் செய்யத் இராட் ஹூசேன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் அவருக்குக் கூற வேண்டிய அவசியம் என்ன என்று யாராவது ஒருவர் கேட்கலாம். ஏன் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் கூட வடமாகாணசபையில் கேட்கலாம்.
அந்திம கால போர்க்குற்ற விசாரணைகளோ, அதன் முன்னரான படுகொலைகள் பற்றிய விசாரணைகளோ எம் நாட்டில் எவ்வாறு நீதிக்கு அமைவாக நடைபெற முடியும் என்ற ஆதங்கமே அவ்வாறான கடிதப் போக்குவரத்துக்களுக்குக் காரணமாக இருந்தன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருந்த போது எமது போர்க்குற்ற விசாரணைகளை இனத்துவேஷம் கொண்டவர்களின் கைகளில் ஒப்படைக்கலாமா என்ற கேள்வியே எம்மை அவ்வாறு எழுதச் செய்தது.
இப்பொழுது கூட வடமாகாணசபை வெளிநாட்டு தக்க சட்ட நிபுணர்களை, நீதிபதிகளை வரவழைத்து எமது படுகொலைகள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்து அறிக்கை பெற சட்டத்தில் இடம் இருக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். எமது மாகாண எதிர்க்கட்சித் தலைவரே இதற்குப் பொருத்தமானவர். அரசாங்கம் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. கொடூரப் படுகொலைகள் பற்றி விசாரணை செய்யாத அரசாங்கங்கள், நடந்தவற்றை நடந்ததா என்று ஆராயாமலே நடக்கவில்லை என்று கூறும் அரசாங்கங்கள், எமது நாடு சுதந்திர நாடு வெளியார் உள்ளீடுகள் பெறப்படாது என்று நீதியைத் திசை திருப்பப் பார்க்கும் அரசாங்கங்கள் எவ்வாறு உண்மையான போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபட முன்வரப் போகின்றன? வடமாகாணசபை சர்வதேச நீதிபதிகளின் துணை கொண்டு உண்மையறியும் ஆணைக்குழு ஒன்றையோ, செயற்குழு ஒன்றையோ நியமிக்க முடியுமா என்று ஆராயுங்கள். முடியுமானால் அதனை நெறிமுறைப்படுத்தி உண்மையை உலகுக்கு எடுத்துரைப்போம். நடந்தவற்றை நடந்தவாறே எடுத்துரைப்போம். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இது ஒன்றே வழியென எனக்குப் படுகிறது.
ஏனென்றால் அரசாங்கமானது நடந்தவற்றைக் கனவாக எண்ணுமாறு எம்மைக் கருதவைக்க கடினமாக உழைத்து வருகின்றது. அரசியல் ரீதியாக அதைத் தருவோம் இதைத் தருவோம் என்று எம்மவருடன் பேரம் பேசுகின்றது. இல்லையென்றால் மகிந்த வந்து விடுவார் என்று பயம் காட்டப் பார்க்கின்றார்கள். ஆனால் அரசாங்கத்திற்குத் தமிழ் மக்கள் மீது கரிசனை இருக்கின்றதென்றால் பின்வருவனவற்றை முதலில் செய்து தரட்டும்.
01. புனருத்தாரண முகாம்களை உடனே இழுத்து மூடி அவற்றுள் வசிப்பவர்களை எமது வடமாகாண சபைத் திணைக்களங்களுக்குத் தாருங்கள். நாங்கள் அவர்களுக்கு உரியவாறான சர்வதேச நியமங்களுக்கேற்ற புனருத்தாரணத்தை அவர்களின் மிகுதிக்காலம் வரையில் அளிக்கின்றோம்.
02. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வாபஸ் பெற்று தற்போது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள்.
03. போர்ப்படையின் தொகைகளைக் கணிசமாகக் குறையுங்கள்.
04. மக்களின் காணிகளைத் திரும்பிக் கொடுங்கள்.
05. மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட அலுவலர்களை அடையாளங் கண்டு அவர்களை சேவையில் இருந்து வெளியேற்றுங்கள். ஐ.நா பிரேரணை 30ஃ1 இதற்கு வசதி அளிக்கின்றது. நான் அவர்களின் பெயர்களை இங்கு கூற முடியாது. பலரை எனக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் இப்பொழுதும் பதவியில் இருந்து வருகின்றார்கள். குற்றங்கள் இழைத்த அவர்களைத் தொடர்ந்து உயர் பதவிகளில் வைத்திருப்பது தற்போதைய அரசாங்கம் மனம்மாறவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. உங்களுக்கு நினைவிருக்கின்றதோ தெரியாது மனித உரிமைகள் அமைச்சராக இருந்த ஒருவர் திருகோணமலையில் இராணுவத்தினர் கையால் கொல்லப்பட்ட தனது மகன் பற்றி அவரின் தகப்பனாரான வைத்திய கலாநிதி பேசிய போது அவரைப் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தினர் அந்த அமைச்சர். மனித உரிமை அமைச்சரே இவ்வாறு நடந்து கொண்டிருந்தாரேயானால் நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியைப் பெற முடியும்?
ஆகவே அரசாங்கம் உண்மையாகத் தமிழ் மக்கள் மீதும் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள் மீதும் அனுதாபம் கொண்டுள்ளதெனின் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக இதுவரை நடந்து கொண்டு வந்த உயர் சிவில், இராணுவ அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் உடனே அடையாளங் கண்டு சேவையில் இருந்து வெளியேற்ற முன்வர வேண்டும்.
06. காணாமற் போனார் செயலகத்திற்கு என்னானது? ஏன் அதனை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை? சட்டம் வலுவற்றதாக இருந்தாலும் உண்மைகளை வெளிக்கொண்டுவர மேற்படி செயலகத்தை செயலாற்ற வைக்க வேண்டும்.
இவ்வாறு பல விடயங்களைக் கூறிக் கொண்டு போகலாம். இதுவரையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கெதிரான மனிதப் படுகொலைகளைக் கண்டும் காணதமாதிரியே இருந்து வந்துள்ளன. இன்று 32 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு படுகொலையை நினைவு கூருகின்றோம் என்றால் அவை எம்மனதில் விட்டுச் சென்ற வடு ஆறவில்லை, வலி ஆறவில்லை என்பதே அர்த்தம்.
இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுத்து நட்ட ஈடு தந்து வேலையை முடிக்கப்பார்க்கின்றது அரசாங்கம். இதற்காக சர்வதேசத்திடம் இருந்து நட்ட ஈட்டுப் பணம் பெற விழைகின்றது. ஏற்கனவே இதனால்த்தான் 1500 மில்லியன் டொலர்கள் சமாதான முன்னெடுப்புக்களுக்குக் குறித்தொதுக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. அப்பணம் ஏன் யுத்தக் குற்ற விசாரணையை நடைமுறைப்படுத்தப் பாவிக்கப்படவில்லை, போரினால் பாதிக்கப்பட்ட முன்னைய போராளிகளுக்குப் புதிய வாழ்வளிக்கப் பயன்படுத்தப்படவில்லை, வடமாகாணத்தில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அப்புறப்படுத்த உபயோகிக்கப்படவில்லை, என்று நான் கேள்வி எழுப்பினேன். வெறும் கிணறுகள் வெட்டி, மலசலகூடம் மற்றும் வீடுகள் அமைத்து, தண்ணீர் தாங்கிகளைக் கட்டுவது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழி வகுக்காது. போர்க்குற்ற விசாரணை உரிய முறையில், சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே வட்டக்கண்டல் படுகொலையில் தமது உறவுகளை இழந்த எமது சகோதர சகோதரிகளின் மனதைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்தக்கூடிய காரியம் என்று கூறி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
1 comment
போர்க் குற்றங்கள் எங்கள் சட்டத்தில் குற்றங்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவற்றை ஏற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்ளூர் நீதிமன்றங்கள், குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறமை, ஆற்றல் அற்றவை. நீதிபதிகள் இனரீதியான மனப்பாங்கு கொண்டவர்கள். ஆகவே சர்வதேச உள்ளீடுகளுடன் நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும். தகுதியான, திறமைவாய்ந்த, பக்கசார்பற்ற சர்வதேச நீதிபதி ஒருவரே குறித்த நீதிமன்றத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். அவர் மற்றைய உள்ளுர் நீதிபதிகளின் கருத்துக்களை மறுத்தொதுக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும், என்ற
திரு. CV விக்னேஸ்வரனின் கருத்து மிகச் சரியானதே!
ஜனாதிபதி உட்படப் பலர், உள்ளூர் நீதிபதிகளினால் குறித்த வழக்கு விசாரணைகளைத் திறம்பட நடத்தி, நியாயமான தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்கின்றனர். அப்படிக் கூறுவோரால், அதிகம் வேண்டாம், பாதுகாப்புத் தரப்பினரால் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட, நாட்டின் பிரபலங்களான திரு. லசந்த விக்கிரமதுங்க, திரு. பிரகீத் எக்னெலியகொட மற்றும் ரக்பி வீரரான திரு. வசிம் தாஜூடீன் போன்றோரின் வழக்குகளை உள்ளூர் நீதிபதிகளினூடாக விசாரித்து, பாதிப்புக்குள்ளானோர் திருப்திப்படும்படியான நியாயமான தீர்ப்பை முதலில் வழங்கிக் காட்டட்டும்! மைத்திரி- ரணில் அரசு பதவிக்கு வந்து இரு வருடங்கள் முடிந்த நிலையிலும், குறித்த வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லையே?
பாராளுமன்றத் சிறப்புரிமைகளைக் கொண்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலை வழக்குகளில் கூட, இன்று வரை ஒரு நியாயமான தீர்வை முன்வைக்காத போலீசாரையும், உள்ளோர் நீதிபதிகளையும், பொது மக்கள் மட்டும் அவர்களின் விசாரணைகளை எப்படி நம்புவார்கள்?