243
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்கள் இலகுவில் வெளியில் வருவதில்லை. இந்த நிலையில், தமக்கென ஓர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுவதற்காக மாற்றுத்திறனாளிப் பெண்கள் தாங்களாகவே முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும் என்று வவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசா தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு என்ற அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அரசாங்கத்திடமே நேரடியாக தமது உரிமைகளைத் தட்டிக் கேட்கின்ற வகையில் செயலாற்றிய பின்னணியில் நன்கு திட்டமிட்டு செயற்படுகின்ற ஓர் அணியாக இவர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்றும் வவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசா கூறினார்.
வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்கள், நிறுவன ரீதியாக இணைந்து, அரச அதிகாரிகளின் ஆலோசனைகள் வழிகாட்டல்களின் ஊடாக, தமக்குரிய உரிமைகள், சலுகைகள், வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதற்காக மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு என்ற பெயரிலான சுய உதவி அமைப்பு ஒன்று வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
வடமாகாண மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் இணைப்பாளர் வேலு சந்திரகலா தலைமையில் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் உத்தியோகத்தர் இன்தமிழ் செ.சிறினிவாசன், வவுனியா பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் செல்வி எஸ்.சோபனா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கி.வசந்தரூபன், அ.தவீசன், கலைவாணி, சைகை மொழிபெயர்ப்பாளர் ரொஷானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா மேலும் தெரிவித்ததாவது:
புதிதாக ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டங்கள் சாதாரணமானதாகவே நடைபெறும். அந்த வகையில் இது ஒரு சாதாரண கூட்டமாகவே இருக்கும் என்ற எண்ணத்துடன்தான் வந்தேன். இங்கு வந்த பின்னர்தான் பல் வேறு தளங்களில் பணியாற்றியவர்கள் ஓர் அணியாகத் திரண்டு முன்வந்து, இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உயிரிழை அமைப்பிலும்கூட எல்லா நிகழ்வுகளிலும் ஆண்களே பங்கெடுப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரிருவரைத்தான் காண முடியும்.
ஆனால், இங்கு பாதிக்கப்பட்ட பெண்களே தமக்கான ஓர் அமைப்பை உருவாக்குவதற்காக முன்வந்திருக்கின்றார்கள். அது பாராட்டத்தக்கது. இந்த அமைப்பில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பெண்களையும் இணைத்து அவர்களின் பங்களிப்பையும் பெற வேண்டும்.
இந்தப் பெண்கள் அமைப்புக்கு பிரதேச செயலகத்தினராகிய நாங்கள் பெரிதும் உதவியாக இருப்போம். எங்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் உங்கள் பணிகளை முன்னெடுக்கலாம். நாங்கள் துணையாக இருந்து உதவுவோம்.
எங்களது பிரதேசத்திலும் 1400 இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். ஆனால் 155 பேருக்குத்தான் மாதாந்தம் 3000 ருபா கிடைக்கிறது. அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் வந்தால் நாங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்.
அரசின் உதவித் திட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள்தான் நாங்கள். அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கும் அந்த உதவுதொகை கிடைக்கக்கூடிய வகையில் பொது அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோர வேண்டும்.
நாங்களும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி அரசின் திட்டங்களில் பங்கெடுப்போம். அடுத்த ஐந்தாண்டுகளில், கணிசமான மாற்றங்கள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கடந்த வருடம் அரசாங்கம் வழங்கிய வாழ்வாதார உதவிகளை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் என்பவற்றைக் கவனத்தில்கொண்டே வழங்கினோம்.
இதன் மூலம் 479 குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. இந்த உதவி வழங்கும் நடவடிக்கையில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இருக்கவில்லை. நூறு வீதம் எங்களது செயலகத்தால் அந்த உதவிகளை வழங்கக் கூடியதாக இருந்தது. கடந்தவருட அடைதலில் எங்களுக்குக் கிடைத்த மிகவும் மகிழ்ச்pசியானதொரு அனுபவமாகும் என்றார்.
சமூக சேவைகள் உத்தியோகத்தர் சிறினிவாசன் உரை
இந்த நிகழ்வில் உரையாற்றிய வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன், இன்றைக்கு உருவாக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளி மாதர்களுக்கான அமைப்பு அவசியம் என்பதை நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என தெரிவித்தார்.
மாற்றுத்திறாளி;களுக்காக சேவையாற்றுவதற்கு எமது மாவட்டத்தில் போதிய அமைப்புக்கள் இருக்கின்றன என்;றே எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் இங்கு கூறப்பட்ட விடயங்களில் இருந்து அத்தகைய அமைப்பு அவசியம் என்பதை எங்களால் உணர முடிகின்றது. மாற்றுத்திறனாளி பெண்களுக்கான சேவைகள் வழங்குவதில் எத்தகையதொரு இடைவெளி காணப்ப:டுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் அவர் கூறினார்.
நல்ல பல மனிதர்கள் உங்களுக்கு பின்புலமாக இருக்கின்றார்கள். அந்தப் பின்புலத்தின்; உதவியோடு, உங்களுக்கு இருக்கின்ற ஆற்றல்கள், செயல் வல்லமை, தூர நோக்கு கொண்ட சிந்தனை என்பவற்றை அடிப்படையாக வைத்து உற்சாகமாகச் செயற்படுவீர்கள் என்று நம்புகிறோம்.
மாற்றுத்திறாளி பெண்களின் எதிர்பார்ப்புக்கள் படிப்படியாக நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் மாவட்ட சமூக சேவை அலுவலகம் உங்களுக்கு வேண்டிய நேரங்களில் எல்லாம் கைகொடுக்கும் என்றார் சிறினிவாசன்.
வடமாகாண மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் இணைப்பாளர் வேலு சந்திரகலா உரை
இந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய வடமாகாண மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் இணைப்பாளர் வேலு சந்திரகலா, மாற்றுத்திறனாளி பெண்களுடைய தேவைகள் எவை என்பதை பொது நோக்கோடு நாங்கள் முன்வைக்க வேண்டும். அவ்வாறு முன்வைத்தால்தான் எமக்குரிய சேவைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் நோக்கங்கள், செயற்பாட்டுத் தளம் என்பன குறித்து அவர் விளக்கமளித்தார்.
மாற்றுத்திறனாளி பெண்கள் ஓரணியில் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகத்தான் தமது திறமைகளை வெளிப்படுத்தவும், சமூகத்தில் முன்னேற்றகரமாக வாழவும் முயும். இந்த நோக்கங்களுக்காகவே, மாற்றுத்திறனாளி மாதர்களுக்கான நலனோம்பு அமைப்பு என்ற இந்த அமைப்பு செயற்பட முனைகின்றது என அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நிலைமாறுகால நீதிப்பொறிமுறை தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியினரின் கருத்தெடுப்பு வேலைத்திட்டத்தின்போது, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் அமைப்பான வீ கேன் நிறுவனத்தின் சார்பாக நாம் செயல்வாதமொன்றை முன்னெடுத்தோம்.
அதில் மாற்றுத்திறனாளிகளான நாம் எமக்காக என்னென்ன நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்? அரசாங்கம் எங்களை எவ்வாறு கவனத்தில் கொண்டு செயற்பட்டால் நாம் நன்றாக வாழலாம்? நாங்கள் நன்றாக இருந்தால் அது எவ்வாறு நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் எந்த அளவில் பயனுடையதாக இருக்கும் என்பது பற்றி யோசித்தோம்.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்தை அறிவதற்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணி வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுத்த கருத்தமர்வுகளில் இயலுமானவரையில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளான எமது பிரதிநிதிகளின் ஊடாக பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்தோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு மாற்றுத்திறனாளிகள் வீதம் 20 பேர் ஒன்றிணைந்து மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் 3 நாட்கள் கருத்தமர்வை நடத்தினோம்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் என்ன, எமக்கான உரிமைகளும் சலுகைகளும் இந்த நாட்டில் எவ்வாறு அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது பற்றி நாங்கள் சிந்தித்தோம். அவை குறித்து விரிவாக ஆராய்ந்தோம். அதனை ஓர் அறிக்கையாகவும் நாங்கள் சமர்ப்பித்தோம்.
எமது சிந்தனைகளும், ஆய்வுகளும், தீர்மானங்களும் வீண் போகவில்லை. நாங்கள் வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பாக, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியின் மாவட்ட மட்ட அறிக்கைகளில் பல இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்தச் செயலணியின் இறுதி அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கத்திலும் பொருத்தமான இடங்களில் நாங்கள் முன்வைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் மற்றும் சலுகைகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
இந்தச் செயலணிக்கு எங்களால் காத்திரமாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மார்ச் மாதம் எதிர்பார்க்கப்படுகின்ற இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான உறுப்புரை ஒன்று ‘இயலாமைகள் மற்றும் விசேட தேவையுடன்கூடிய பிரஜைகளின் உரிமை’ என்ற தலைப்பின்கீழ் இடம்பெற உள்ளது.
இது ‘அடிப்படை உரிமைகள்’ எனும் உப குழுவின் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
இதுவரையில் இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக எந்தவிதமான விடயங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், இனம், மதம், மொழி கடந்து இந்த நாட்டின் சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன் கிடைக்கக்கூடிய ஒரு பணியினை முன்னெடுக்க எங்களால் முடிந்திருக்கின்றது என்ற திருப்தி எங்களுக்கு இருக்கின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதிய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்துக்கான ஐநாவின் வளங்குன்றா வளர்ச்சிக்கான பிரகடனத்தின் 17 குறிக்கோள்களையும் அடைய உலக மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கு கொள்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், அந்த இலக்குகளை எமது மாற்றுத்திறனாளிகளும் அடையும் பொருட்டு என்ன வழிகள் இருக்கின்றன என்பதை நாம் கண்டறிந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, நமக்கும் நாட்டினுடைய அபிவிருத்திக்கும் நாம் பங்களிக்க முடியம் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.
ஆகவே, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அரசாங்கம் தீர்மானங்களை எடுத்தால்தான் அரச அலுவலர்கள் நமக்கு உதவிகளை இலகுவாகச் செய்ய முடியும்.
அரச அலுவலர்கள் நமக்கு உதவ வேண்டும் என்றால் எங்கள் குரல்கள் அரசாங்கத்தை நோக்கி எழுப்பப்பட வேண்டும். அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். எனவே, எமது தேவைகளை நாங்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு வெளிப்படுத்தினால்தான் மற்றவர்கள் மாற்றுத்திறனாளி பெண்களின் நிலைமைகளையும் கஸ்டங்கள், தேவைகளை விளங்கிக்கொள்ள முடியும். உணர முடியும்.
ஆகவே, எங்களுடைய தேவைகள் எவை என்பதை பொது நோக்கோடு நாங்கள் முன்வைக்க வேண்டும். இந்த நோக்கங்களுக்காகவே, மாற்றுத்திறனாளி மாதர்களுக்கான நலனோம்பு அமைப்பு என்ற இந்த அமைப்பு செயற்பட முனைகின்றது என்றார்.
மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பிரியதர்ஷினி இராஜேந்திரனின் உரை
இங்கு உரையாற்றிய மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பிரியதர்ஷினி இராஜேந்திரன், சமூகத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்களாகிய நாங்கள் தனித்தனியே செயற்பட முடியாது. ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகத்தான் எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் அவயவத்தை இழக்கும் அளவுக்குப் படுகாயமடைந்ததைவிட, அதுக்குப் பிறகு சமூகத்தில் தான் மனதளவில் நிறைய காயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர் அங்கு பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது:
பேருந்து தரிப்பிடத்தில காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், அங்கு காத்திருக்கின்ற அவ்வளவு நேரத்தையும் கடத்துவதற்காக என்னுடைய கதையைத்தான் அங்கு நிற்பவர்கள் பயன்படுத்துவார்கள். காலுக்கு என்ன நடந்தது? எப்படி கால் இல்லாமப் போனது? கால் போடேலாதோ? கலியாணம் செய்யவில்லையா? ஏன கல்யாணம் செய்யாமல் இருக்கிறீர் என்றெல்லாம் கேள்விகள் கேட்டு என்னைப் பிய்த்து எடுப்பார்கள்.
அப்போது எரிச்சலும் கோபமும்தான் வரும். எல்லா நேரமும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருக்க இயலாமல் இருக்கும்.
ஒரு செயற்கைக்கால் கூட போட முடியாத அளவுக்கு காயப்பட்டதன் வலியை விட அப்போது மனதில் படுகின்ற காயம்தான் பெரிய காயமாக இருக்கும். வேதனையாகவும் இருக்கும்.
இப்படியான சமூகத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்களாகிய நாங்கள் தனித்தனியே செயற்பட முடியாது. ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகத்தான் எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
எனவே, ஒன்றிணைந்து எங்களுக்காக நாங்களே செயற்பட வேண்டும். எமக்கான உரிமைகளையும், சலுகைகளையும், உதவிகளையும் நாங்கள்தான் கேட்டுப் பெற வேண்டும்.
எமக்குரியவற்றை இன்னொருவர் பெற்றுத்தருவார் என்று நாங்கள் இருக்க முடியாது. இருந்துவிடக்கூடாது என்றார்.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பிற்கான நிர்வாக சபை ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
Spread the love