குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சி அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஏதேச்சதிகார பாதையை தெரிவு செய்து கொண்டுள்ளதாக கண்டியில் மல்வத்து பீடாதிபதியை நேற்றைய தினம் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது பற்றிய உண்மையை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும் அரசாங்கம் இந்த மோசடியை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.