குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவிக்கு ஆதரவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் நீதிபதிகளான துரைராஜா ஆகியோர் இந்த தீர்ப்பினை அறிவித்துள்ளனர்.
மருத்துவ நியதிச்சட்டத்திற்க அமைவாக மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவரை, அரசாங்க மருத்துவர்கள் பேரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அதன் உயர்கல்வி அமைச்சின் ஊடாக மாலம்பே தனியார் கல்லூரியை பட்டம் வழங்கும் ஒர் நிறுவனமாக அங்கீகரித்து வர்த்தமானியில் அறிவித்திருந்தது என தெரிவித்துள்ள நீதிமன்றம் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரின் அதிகாரத்தின் அடிப்படையில் இவ்வாறு பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை மருத்துவர் பேரவை இந்த அங்கீகாரத்தை நிராகரித்தால் அது அமைச்சரின் அதிகாரத்தை மீறிச் செயற்படுவதற்கு நிகரானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று :
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்விபயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தமது பதிவு நிராகரிக்கப்பட்டமை குறித்த மாணவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் , சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 17 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பே இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.