குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யாது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சில முக்கிய அதிகாரிகளை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் நீக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கப் பிரதிநிதி சமந்தா பவர், அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், ஜனநாயகத்திற்கான துணைச் செயலாளர் டொம் மொலினோவ்ஸ்கீ ஆகியோரை ஜனாதிபதி ட்ராம்ப் நீக்கியுள்ளதாகவும் நிசா பிஸ்வால் போன்றவர்களை இனி வரும் காலங்களில் இலங்கையில் பார்க்க முடியாது எனவும் அவர்கள் இனி விடுமுறைக்காக மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என்ற கொள்கையை ஜனாதிபதி ட்ராம்ப் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன் இலங்கையின் இறையாண்மையை மதிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்