குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு இந்தக் கொலை முயற்சி வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.
சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த கொலை முயற்சி தோற்கடிக்கப்பட்டமை ஆறுதலையும் திருப்தியையும் தருவதாகவும், இந்த சதித் திட்டத்தை முறியடித்த அனைத்து தரப்பிற்கும் நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சதித் திட்டத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்கள் அரசியலில் சுமந்திரன் முக்கிய பங்கினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தைரியமுடன் சுமந்திரன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை எனவும் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது.