மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடுமாறு கோரி அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று தாக்கல் செய்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடுமாறு கோரி கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று வழக்கு தாக்கல் செய்தது.
இந்தப் பாதை திறக்கப்படுவதால் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுமென்றும் இது நெடுஞ்சாலைப் பாதையெனவும் கூறியே சூழலியல் நிறுவனமொன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது
இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்னிலையாகியிருந்தார்.
வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்கள் பயன்படுத்தும் இந்தப்பாதையை மூட வேண்டுமெனவும் அதனை செப்பனிடக்கூடாதெனவும் கூறுவது நியாயமானது அல்ல என குறிப்பிட்டுள்ளார்