இலங்கை வசம் உள்ள 25 தமிழக மீனவர்களையும், 123 படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டையில் இலங்கை கடற்படை 5 மீனவர்களை சிறைபிடித்து, அவர்களது ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளதுடன் மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
தமிழக அரசும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு இன்னும் சுமுகத் தீர்வு காணவில்லை. ஏற்கெனவே இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 122 படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படகை பறிமுதல் செய்து சென்றதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் விரைவில் நிறுத்தப்பட வேண்டும். இதற்காக மத்திய பாஜக அரசு இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் நல்ல தீர்வு எட்டப்படும் வரை இலங்கை கடற்படை – தமிழ மீனவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்பதை உறுதிபட தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.