ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் மீனவ பகுதியில் இருந்து நீதிபதி ராஜேஸ்வரன் தனது விசாரணையை நாளை ஆரம்பிக்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
இதன் பின்னரும் போராட்டம் முடிவுக்கு வராததால், மெரினாவில் திரண்டிருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில், வன்முறை வெடித்தது. இதன்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சென்னை உய்hநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை கலவரம் குறித்து விசாரணை நடத்துவார் என்று நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி ராஜேஸ்வரன் நாளை விசாரணையை ஆரம்பிக்கவுள்ளார். நாளை மெரினா கடற்கரையை யொட்டியுள்ள நடுக்குப்பம் மீனவ பகுதியில் இருந்து ராஜேஸ்வரன் தனது விசாரணையை தொடங்க உள்ளார். தனது விசாரணையை 3 மாதத்துக்குள் முடித்து நீதிபதி ராஜேஸ்வரன் அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளார்.