குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் ஒரு வருடம் முடிவடைந்துள்ளதனால் மேலும் இரண்டு மாத காலங்களுக்கு நீடிக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தார் அதில் தனது தரப்பு நபர் மாணவி உயிரிழந்து ஏழு மாதங்களுக்கு பின்னர் மாணவியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்தவே சென்றார். அவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குற்றபுலனாய்வு துறையினர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தனது தரப்பு நபருக்கும் இந்த வழக்குக்கும் நேரடி தொடர்பு இல்லை என குறிப்பிட்டு உள்ளனர். எனவே அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கோரினார்.
குறித்த பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 3ம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார். இதேவேளை குறித்த சந்தேகநபர் தான் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதால் இ தன்னை பெற்றோர்கள் உறவினர்கள் சந்திக்க முடியாதால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன் எனவும் எனவே தன்னை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிபதியிடம் கோரிக்கை முன் வைத்தார்.
குறித்த வழக்கின் சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதியே வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் எனவே தொடர்ந்தும் வவுனியா சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவு இட்டார்.