குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சர்ச்சைக்குரிய மிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த மிக் கொடுக்கல் வாங்கல் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த விசாரணைகள் தொடர்பில் கோதபாயவை கைது செய்வதற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச் செயல் குறித்து கோதபாய ராஜபக்ஸவிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிக் 27 ரக இராணுவ விமானக் கொள்வனவில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ரஸ்யாவிற்கான மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினரான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இன்டர்போலுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட அதிகாரிகள் கைது செய்யப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டுமென கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமொன்றில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோதபாயவின் கைதுக்கு அனுமதியளிக்கப்படுமா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.