முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. கேப்பாபுலவு பிரதேசத்தின் பல பகுதிகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. புலக்குடியிருப்பு பகுதி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியபோதிலும் இதுவரையிலும் அதிகாரிகள் எவரும் அங்கு வருகை தரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இராணுவத்திற்கு எதிராக உக்கிரமாக குரல் எழுப்பி வருகின்றனர்.
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போர்க் குரல் எழுப்பியுள்ள கேப்பாபுலவு பெண்கள் ‘இது இராணுவம் இல்லை! அநியாயம்’ என்றும் இடித்துரைத்தனர்.
தமது உயிரை கொன்றுதான் காணிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்றால் போராடி உயிரை விடுவோம் என்றும் தமது காணிகளை மீட்காமல் ஓயப்போவதில்லை என்றும் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அத்துடன் காணிக்காக போராடும் நிலையில் தமது வீட்டு மின் இணைப்புக்களையும் குடி தண்ணீரையும் இராணுவம் துண்டித்ததாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் வந்து சென்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 50 இராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை நோக்கி வந்ததாகவும் இதனால் அச்சமடைந்த பெண்கள் தம்மை நோக்கி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட நிலையில் இராணுவம் திரும்பிச் சென்றுள்ளது.
மேலும் திரும்பிச் சென்ற இராணுவம் முகாமிற்குள் இருந்தபடி தம்மை பெண்கள் தாக்குவதாக சத்தமிட்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டதாகவும் அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். எனினும் இராணுவத்தின் தடைகள், அச்சுறுத்தல்களை மீறி கேப்பாபுலவு மக்களின் போராட்டம் உக்கிரமாய் தொடர்கிறது.
போராட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.