Home இலங்கை சுதந்திர இலங்கையில் சுதந்திரமற்றவர்களாக வாழ்கின்றோம் – வட மாகாண மாற்றுத்திறனாளிகள்

சுதந்திர இலங்கையில் சுதந்திரமற்றவர்களாக வாழ்கின்றோம் – வட மாகாண மாற்றுத்திறனாளிகள்

by admin

சுதந்திர இலங்கையில் நாம் சுதந்திரமற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், இயலாமை உள்ளவாகளின்  சுதந்திரங்களும், உரிமைகளும்  இலங்கையில் பேச்சளவில் காணப்படுகின்றதே தவிர செயலளவில் இல்லை என வட மாகாண மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வே.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்று 03-02-2017 கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இலங்கையின் 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, இலங்கையில்இயலாமையுள்ள மக்களின் சுதந்திரங்களும் உரிமைகளும் எந்தளவு பேணப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது தொடர்பாக வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் ஊடகங்களுக்கும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கைதனது 69வது சுதந்திரதினத்தை கொண்டாடும் தருணம் இது. 1948ஆம் ஆண்டு அடையப்பெற்ற இந்த சுதந்திரத்தின் அனுகூலங்கள் எந்தளவிற்கு இயலாமையுள்ள மக்களால் அனுபவிக்கக்கூடியதாக உள்ளது என்ற வினா எப்போதுமே அந்த மக்களின் மனதில் ஒரு பூதாகரமான வினாவாக இருந்து வருகின்றது. தங்களது சுதந்திரமும் உரிமைகளும் முறையாக பேணி பாதுகாக்கப்படவில்லை என்று அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்., அந்த வகையில் அரசியல் மற்றும் வாக்களிக்கும் உரிமை, நடமாடும் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை ஆகிய3 முக்கியமான உரிமைகளின் மீறல்களை மட்டும் இவ்வறிக்கை சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

  1. அரசியல் மற்றும் வாக்களிக்கும்உரிமைகள்

 

  • பல இயலாமையுள்ள நபர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தும், அவர்கள் இயலாமை காரணமாக குடும்ப அங்கத்தவர்களும் கிராமசேவை அதிகாரிகளும் அவர்களை வாக்காளர்களாக பதிவதை தவிர்க்கின்றனர்.
  • வாக்களிப்பு நிலையங்கள் அவர்களுக்கேற்ற அணுகும் வசதிகளைக் கொண்டிருப்பதில்லை.
  • வாக்களிப்புநிலையங்களை மாடிகளில் அமைக்கும் போது சக்கர நாற்காலிகளில் வருகை தருவோர் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
  • விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்குப்ரெயில் வாக்குச்சீட்டுக்கள் இல்லை.
  • செவிப்புலனற்ற வாக்களர்களுக்கு தொடர்பாடல் வசதிகளை வழங்க வாக்களிப்பு நிலையங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பதில்லை.
  • உளவள ஆலோசனை அல்லது உளநலன் சிகிச்சை பெறும் நபர்கள் கூட புத்தி சுவாதீனமற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு, குடும்ப அங்கத்தவர்களாலும் கிராமசேவை அதிகாரிகளாலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • படுத்தபடுக்கையாகவுள்ள இயலாமையுள்ள மக்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் எதுவுமில்லை.
  • வாக்களிக்க விரும்புகின்ற ஆனால் பொதுபோக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யமுடியாத, சொந்த வாகன வசதிகள் இல்லாத வாக்காளர்களுக்கு தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது சிரமமான நிர்வாக நடைமுறையைக் கொண்டிருக்கிறது.
  • வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரும் இயலாமையுள்ள வாக்காளர்களைகையாளுவதற்கு வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் போதிய அறிவையும், பயிற்சியையும் பெற்றிருப்பதில்லை.
  • அரசியற் கட்சிகள் இயலாமையுள்ள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வமளவிற்கு அவர்களுக்கு தமது கட்சிகளில் அங்கத்துவம் வழங்குவதற்கோ அவர்களை தமது வேட்பாளர்களாக நிறுத்துவதற்கோ ஆர்வம் காட்டுவதில்லை.

பாராளுமன்றத்திலோ மாகாணசபைகளிலோ உள்ளூராட்சிமன்றங்களிலோ இயலாமையுள்ளமக்களின் பிரதிநிதித்துவம் இன்மையினால் அவர்கள் தொடர்பானசட்டங்களும் கொள்கைகளும் மற்றவர்களினாலேயே இயற்றப்படுகின்றன

  1. நடமாடும்சுதந்திரம்

 

  • வீதிகள் இயலாமையுள்ள நபர்கள் சுதந்திரமாக சென்றுவரக்கூடிய அணுகும் வசதிகளைக்கொண்டவையல்ல.
  • புகையிரத நிலையங்களும் பேரூந்து நிலையங்களும் பேரூந்து தரிப்பிடங்களும் இயலாமையுள்ள மக்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியாதபடி பல குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன.
  • புகையிரதம், பேரூந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் இயலாமையுள்ள மக்களும் சுதந்திரமாக பயணிக்கக் கூடிய வசதிகள் மிகமிகக் குறைவு. இருக்கும் ஒரு சில வசதிகளையும் அனுபவிக்க மற்றவர்கள் அனுமதிப்பதில்லை.
  • விழிப்புலனற்றோர் நடமாடுவதற்கு பயன்படுத்தும் வெள்ளைப்பிரம்பு அதற்கான அங்கீகாரத்தை மக்கள் மத்தியில் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றிருக்கின்றதே ஒழிய, அதற்குசட்ட அங்கீகாரம் கிடையாது.
  • செவிப்புலனற்றோர் தமது இயலாமையை உறுதிப்படுத்தக் கூடிய பதிவுகள் எதுவும் தேசிய அடையாள அட்டையில் இல்லாதபடியாலும், மற்றவர்கள் அவர்களின் இயலாமையை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத படியாலும், வீதிகளில் அவர்கள் பல்வேறு பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
  • இயலாமையுள்ள பெண்களும் சிறுமிகளும் அதிலும் மனவளர்ச்சி குன்றிய பெண்களும் சிறுமிகளும் மற்றவர்களின் உதவியின்றி, தனித்துதங்கள் இல்லங்களை விட்டுவெளியே சென்றுவருவது பாலியல் துஸ்ப்பிரயோகம் போன்ற பாதுகாப்பு இன்மைகளை தோற்றுவிக்கின்றது.
  • படுத்தபடுக்கையாக உள்ள தீவீர இயலாமை கொண்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது தேவைகளுக்கு வெளியே சென்று வருவதற்கு விசேட சமூக நலன் ஏற்பாடுகள் எதுவுமில்லை.
  • பொதுக்கட்டடங்கள் அணுகு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற சட்டங்கள் இருப்பினும் அவை நடைமுறைப்படுத்தப்படாததால் இயலாமையுடன் கூடியமக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், ஏனைய சேவைகளைப் பெறுவதற்கும் கஸ்டப்படுகின்றார்கள்.

  1. தகவல்அறியும்உரிமை
  • அச்சு வடிவில் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் அரசதகவல்கள் எவையும் விழிப்புலனற்ற மக்களுக்குப்ரெயில் எழுத்துவடிவில் வழங்கப்படுவதில்லை.
  • தொலைக்காட்சி செய்திகளை செவிப்புலனற்றோரும் கேட்டுப்பயன் பெறும்வகையில் அவை சைகை மொழியில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு மிக, மிக குறைந்த முன்னுரிமையே வழங்கப்படுகின்றது. அல்லது வழங்கப்படுதில்லை என்றே கூறிவிடலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More