குளோபல் தமிழ் செய்தியாளர்
யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை எப்போது அறிவது என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டை ஒன்றிணைப்பதற்கு சிறந்த முறை சமஷ்டி என உலகிலுள்ள அனைவரும் கூறுகின்றனர். எனினும், அது நாட்டைப் பிளவுபடுத்துகின்றது என தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் மாத்திரம் கூறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தயாசிறி தன்னை விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை எனின், ஆட்களை வரவழைத்து அவர்களிடம் என்ன நேர்ந்தது என நாம் ஆராய வேண்டும் என தாம் கூறியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையே தாம்; இனவாதத்தை ஏற்படுத்துவதாகவும், தன்னை விரட்ட வேண்டும் எனவும் தாயசிறி கூறுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை நாம் எப்போது அறிவது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்காகவே தான் அவ்வாறானதொரு கருத்தைக் கூறியிருந்தேன். தாம் இல்லை எனின் மற்றுமொருவர் அதனைக் கேட்பார் எனவும், இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நாம் எமக்குள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டும் எனவும், அதனை அறியாது நாம் ஒவ்வொரு விடயங்களையும் கூறுவதால் பயனில்லை எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் – சிங்கள மக்களிடையேயான ஒற்றுமையை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் பிளவுபடுத்துகிறார் என்றும் ஒற்றுமையை சீரழிக்கும் பூதம் போல அவர் செயற்படுகிறார் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர் குற்றம் குற்றம் சுமத்தியிருந்தார்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதிக்கு அடி பணிந்தே சி.வி. விக்னேஷ்வரன் செயற்படுவதாகவும் அவரைத் தமிழ் மக்கள் தாக்கி விரட்ட வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே; தெரிவித்திருந்தார்.