தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தகர்கள் இன்று (சனிக்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படையினர் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளை அளந்து கையளிப்பதற்காக காணி உரிமையாளர்களை கடந்த திங்கட்கிழமை குறித்த பகுதிக்கு வருமாறு கேப்பாப்பிலவு கிராம சேவை உத்தியோகத்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய மக்கள் அங்கு சென்ற போதிலும் அரசஅதிகாரிகள் எவரும் வருகை தராத நிலையில், காணி விடுவிப்பு தொடர்பில் தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறாக தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகல் பாராது தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமது வாழ்வியல் பிரதேசங்களை விடுவிக்குமாறு கோரியும், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மக்களினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.