7 நாடுகளின் மக்கள் மற்றும் அகதிகள் மீது அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த தடையை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி அமெரிக்க அரசின் நீதித் துறை தாக்கல் செய்த வேண்டுகோளை, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த தடையை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன.
டிரம்ப் விதித்திருந்த தடைக்கு, சியாட்டல் நீதிபதி வழங்கிய தேசிய அளவிலான தற்காலிக இடைநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அரசின் இந்த மேல்முறையீட்டை நிரானரித்த நீதிமன்றம், இந்த தடை குறித்து மேலதிகமான விரிவான விளக்கங்களை, திங்கள்கிழமைக்குள் நீதித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் பின்னரே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பை வழங்கிய நீதிபதி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பற்றிய விடயத்தில் ஜெனாதிபதியின் முடிவுக்கு எதிராக, இந்த தற்காலிக தடையை வழங்கியதன் மூலம், முடிவுக்குப் பின்னான கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார் என அவர் மீது டிரம்ப் நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.