ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.
பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகள் நுழைவதை தடுத்து புதுக்குடியிருப்பில் போராட்டம் தொடர்கிறது:-
ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம், 4ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து இப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை உள்நுழையவிடாமல் தடுத்து இப் போராட்டத்தை நடத்துவதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்கள், கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது அவர்களது காணிகளை படையினர் கையகப்படுத்தியிருந்தனர். தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், பொறுமை இழந்தவர்களாய் இம் மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.