ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாரகன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததும், அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வந்த சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு விரைவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட சசிகலா முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.