Home இலங்கை பொதுமக்களின் உயிரில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுங்கள் – டெனீஸ்வரன்

பொதுமக்களின் உயிரில் அக்கறையுள்ளவர்களாக செயற்படுங்கள் – டெனீஸ்வரன்

by admin

பொது போக்குவரத்து சேவையினை வழங்குகின்ற தரப்பினர்கள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்துகின்ற சாரதிகள் ஆகியோர் அடுத்தவர்களது உயிர்மீது அக்கறையுள்ளவர்களாக செயற்படுமாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள தனது அறிக்கையில் கோரியுள்ளார். மேலும் அவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவை வழங்குவதென்பது மிகுந்த சவாலுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர்செய்வது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

எமது மாகாணத்தில் தினந்தோறும் எதோ ஓர் மூலையில் வீதி விபத்தால் மக்களது பெறுமதிமிக்க உயிர்கள் வீணாக பறிக்கப்படுவதும்,   பலர் நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்படுவதும் அதிகரித்தவண்ணமே உள்ளது, இதற்க்கு பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தரப்பினர்கள் வீதி ஒழுங்குகளை ஒழுங்காக பின்பற்றாது நடப்பதும், மேலும் போக்குவரத்து சேவையை வழங்கும் தரப்பினருக்கிடையில் காணப்படுகின்ற கண்மூடித்தனமான போட்டித்தன்மையும், ஓர் சீரான இணைந்த நேர அட்டவணையை பின்பற்றாமையும், வீதியில் பயணிக்கின்ற ஒரு சில பொதுமக்களின் அசமந்தப்போக்கும் முக்கிய காரணங்களாக காணப்படுகிறது.

பச்சிளம் சிறார்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் மீண்டும் வீடு வந்து சேருவார்களா? என்று ஏங்கும் அளவிற்கு வீதி  விபத்துக்கள் தலைவிரித்தாடுகிறது. இவ்வாறான ஓர் ஐயத்தன்மையை நீக்கி அநியாயமாக பறிக்கப்படும் ஒவ்வொரு உயிர்களையும் காக்கவேண்டும் என்ற நோக்கோடும், எமது மக்கள் ஓர் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடனுமே ஒட்டுமொத்த பொதுமக்களது நலனையும் நோக்கியதாகவே எனது நடவடிக்கைகள் இருந்துவருகிறது. இதற்க்கு எதிராக எத்தகைய எதிர்ப்புவரினும் அதனைத் தாண்டிச் சென்று நீதியை நிலைநாட்டுவது எனது கடமை என்பதை நான் நன்கு அறிவேன், அந்த வகையில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு எனது பொதுமக்கள் பக்கபலமாக இருக்கவேண்டும் என்று கேட்டுநிற்கின்றேன். இல்லையேல் இன்னும் எத்தனையோ பெறுமதிமிக்க உயிர்களை வீதி விபத்திற்குப் பலிகொடுக்கப்போகின்றோம் என்பது மட்டும் உறுதி, இன்று அடுத்தவர் உயிர் தானே போகின்றது என அசமந்தமாக இருப்போமெனில் நாளை நாமோ அல்லது நமது பிள்ளைகளோ இதனை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. எனது பொதுமக்களும் புத்தி ஜீவிகளும் தூர நோக்கோடு சிந்திப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேரூந்து நிலையம் மத்திய போக்குவரத்து அமைச்சர் கெளரவ நிமால் ஸ்ரீபாலடிசில்வா அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து மக்களது பாவனைக்கு கொடுக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், அன்றய தினமே இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினர் ஆகிய இரண்டு தரப்பினரையும் குறித்த புதிய பேரூந்து நிலையத்தில் இருந்தே தமது சேவைகளை வழங்கவேண்டும் என்ற ஓர் கட்டளையை சம்மந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் மத்திய போக்குவரத்து அமைச்சர் அவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், வட மாகாண பிராந்திய முகாமையாளர், வவுனியா மாவட்ட சாலை முகாமையாளர் மற்றும் அன்றய தினம் வருகைதந்திருந்த போக்குவரத்து பிரதி அமைச்சர், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையிலேயே குறித்த கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டது.

குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையை வழங்காமல் இருப்பார்களென்று சொன்னால் மீறுகின்ற தரப்பினர்மீது தான் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், வேண்டுமானால் சம்பளத்தை நிறுத்துவதாகவும்  அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடிசில்வா  கூறியிருந்தார் என்பதனை இங்கு தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன், மேலும்  அச்சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் நான் கூறியிருந்த விடயம், இணைந்த நேர அட்டவணை தற்போது தயாராக உள்ளது அதனை அமுல்படுத்துகின்ற போது அதற்க்கு எதிராக செயற்படுகிறவர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். இச் செய்தி பிழையாக திரிபுபடுத்தப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்களுக்கு கூறப்பட்டுள்ளதாக தற்போது அறியமுடிகின்றது. ஓர் செய்தி கூறப்படும்போது அதன் உண்மைத்தன்மை என்ன என்பது தொடர்பில் அலசி ஆராய்வது எமது கடமை என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்தும்போது அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கமுடியும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கு உணர்ந்துகொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதி நடத்துனர்கள்  நன்கு உணர்ந்துகொள்ளவேண்டும், இது எமது பிள்ளைகள், எமது மக்கள்  என்பதை. இவர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவது எமது கடமையாகும்.

மேலும் கொடும்பாவி எரிப்பதனால் அநீதி நீதியாகிவிடாது, நீதி அநீதியாகிவிடாது. ஆகவே பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு முன்வாருங்கள், இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை. என மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More