குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நல்லதொரு திட்டம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்தவ கல்லூரி ஒன்றை நிறுவும் வகையில் மஹிந்த எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவினால் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த தீர்மானங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது எனவும், ஏதேனும் தரநிர்ணயங்களை விதித்து அதனை பின்பற்றுமாறு கோரினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு கோரப்படும் தர நிர்ணயம் அரச பல்கலைக்கழகங்களிலும் காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் பிறந்த ஒர் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக இந்த அரசாங்கத்தின் மீது கோபித்துக் கொண்டு போராட்டங்கள் நடத்துவது பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.