வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசத் தயார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் மத்திய அரசின் கீழ் தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை, முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் வேறுபட்ட கருத்து இல்லை எனவும் முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பிரச்சினைகளை இருசாராரும் இணைந்து பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்கள் மக்களுடைய தேவைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்ன என்பதை அடையாளப்படுத்தி அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்தித்து வருகின்றனர் எனவும் இதேபோன்று முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளையும்; இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் எனவும் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.