குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சொந்த ஊர் திரும்புவதே எமது ஒரேயொரு இலக்கு. அது நிறைவேறும் வரை வீதியில்தான் எங்கள் வாழ்க்கை என கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனா்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று சனிக்கிழமை 11-02-2017 பதினொறாவது நாளாக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
தங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தங்களின் சொந்த நிலங்களே தங்களுக்கு வேண்டும் என்றும் உறுதியாக சிறுவா்கள் முதியவா்கள் என போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்
இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் உறுதியாக நிற்கின்றனா். இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்புகள், மாணவர் அமைப்புகள், பொது அமைப்புகள், மத அமைப்புகள்,சில சிங்கள மக்கள், என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
சுமாா் 524 ஏக்கா் மக்களின் வளமிக்க நிலத்தை இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இது பிலக்குடியிருப்பு மக்களின் விவசாய நிலங்கள், அவா்களின் வாழ்வாதாரத்திற்கான நிலங்கள் அந்த நிலங்களே அந்த மக்களை வாழ வைத்திருக்கிறது. எனவே அந்த நிலங்களை இழந்து நிற்கும் மக்கள் பொருளாதாரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவா்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தங்களின் சொந்த நிலங்களை தவிர தங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பதில் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனா்.
அத்தோடு சொந்த நிலங்கள் இன்மையால் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அரச மற்றும் அரசசாா்பற்ற நிறுவனங்களின் பல உதவி திட்டங்களையும் இந்த மக்கள் இழந்து நிற்கின்றனா். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு வீடு இல்லை இவ்வாறு சொந்த நிலம் இன்மையால் ஏற்படக் கூடிய அனைத்து பாதிப்புக்களையும் இ்நத மக்களை பாதித்திருக்கிறது.
எனவே பொறுத்தது போதும் என்று உறுதியாக தங்களின் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்.