குடியுரிமை தொடர்பான சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
சுவிட்சர்லாந்தில் பிறக்கும் ஒருவருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்படுவது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் அதே வேளை, அங்கு வசித்து வரும் பிற நாட்டவர்கள் குடியுரிமை பெற வேண்டுமாயின் குறைந்தது 12 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் சட்டம் தொடர்பிலேயே இந்த வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
அதுமட்டுமின்றி பிறநாட்டவர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறவேண்டும் எனில், அவர் அரசாங்கத்தினால் நடத்தப்படும் நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும் இந்த நேர்முக தேர்வின் பொருட்டு அவர் பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் என பலர் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கமைய சுவிட்சர்லாந்தில் பிறந்த ஒருவரது பெற்றோர், மூதாதையரும் சுவிட்சர்லாந்திலேயே பிறந்து வளர்ந்தனர் என நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் மீதான சட்டங்கள் தளர்த்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், பெற்றோர் மற்றும் மூதாதையரின் விபரங்களை சமர்பிக்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.