குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றினை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை,இவ்வாறாக அரசியல் ரீதியாக பல விடயங்களை முன்னெடுத்தாலும், அவற்றில் முன்னேற்றம் காணமுடியாதுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இன்று (புதன்கிழமை) காலை முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தனர். இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் தொடர்பாக பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எந்தவகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சென்றடைகின்றன என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தினை அமைப்பது தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவற்றினை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியல் ரீதியாக பல விடயங்களை முன்னெடுத்தாலும், அவற்றில் முன்னேற்றம் காணமுடியாதுள்ளது .
கடந்த 69 வருட காலமாக தீர்க்கப்படாத விடயங்களை இனியும் தீர்க்காமல் இருந்தால், மக்கள் வேதனைப்படுவதுடன் பிரச்சினைகளும் அதிகரிக்கும். அத்தோடு, மத்திய அரசின் செயற்றிட்டங்களை எம்முடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என அவர்களுக்கு எடுத்துக்கூறினேன்.
அவற்றை அவர்கள் செவிமடுத்ததோடு, வடக்கு மாகாண மக்களுக்கான திட்டங்களை வகுக்கும் போது தமக்கு ஆதரவினை தருமாறும் கேட்டிருந்தார்கள். அதற்கு முழுமையான ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளேன் என மேலும் தெரிவித்தார்