Home இலங்கை போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை

போரில் எம் சிறுவர்கள் கொன்றெறியப்பட்டதற்கும் பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை

by admin
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் 15ஆவது நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிலக்குடியிருப்பு மக்களின் ஆரம்ப சுகாதார நிலையமும் முன்பள்ளியும் இன்று இலங்கை அரசின் விமானப் படைமுகாம் வாயிலாக மாறியுள்ளது. அதற்கு எதிரிலே தரகங்களால் கூடாரங்களை அமைத்துக் கொண்டு, அதில் இருந்தும், அருகில் உள்ள வயல்களில் சமைத்து, உண்டு, உறங்கி எழுந்து கொண்டு கடந்த 15 நாட்களாக வீடு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் மக்கள்.

அந்த மக்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்தும் தகரக் கூடாரங்களில் ஒரு பத்து நிமிடம்கூட இருக்க முடியாது. பகல் முழுவதும் கடுமையான வெய்யில். பெண் குழந்தைகளும், சிறுவர்களும் வெயிலில் வாடிக் கறுத்துப் போயிருந்தார்கள். இரவு வந்ததும் கடும் பனி. இப்படித்தான் அந்த மக்கள் ஒவ்வொரு கணங்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் ஏன் இப்படி தெருவில் வந்து போராடுகிறார்கள்? பல்வேறு போராட்டங்களைச் செய்து, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையிலேயே மக்கள் மிகவும் பாதிப்பை தரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் உக்கிரமான வார்த்தைகள் இந்த நிலத்தில் மண் ஆக்கிரமிப்புக்கு எதிராக, இன ஒடுக்குதலுக்கு எதிராக வெகுண்டெழுந்த குரல்கள் அவை. நாங்கள் 84 பெண்களை இந்த நிலத்திற்காக கொன்றால், 84 ஆண்கள் வருவார்கள். நாளை எங்கள் வீடுகளிலிருந்து பிள்ளைகள் வளர்ந்து எங்கள் நிலத்திற்காக வருவார்கள். நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசுகின்றனர் இப் பெண்கள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட சொற்கள் அவை.
அவர்கள் கேட்கிறார்கள். சிங்கள மக்களுக்கு ஒன்று என்றால் இந்த அரசாங்கம் இத்தனை நாட்கள் பனியிலும் வெயிலிலும் இப்படி அலைய விடுமா? நாங்கள் தமிழ் மக்கள் என்பதால்தானே இப்படி ஓர வஞ்சனை? அந்த மக்களே இலங்கை அரசின் இனப் பாரபட்சம் குறித்தும் இன ஒடுக்குமுறை குறித்தும் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் கேட்கிறார்கள். அந்தப் பச்சிழங் குழந்தைகளின் முகங்களை, பள்ளி செல்ல வேண்டிய சிறுவர்களின் முகங்களைப் பார்த்தால் மனசாட்சி உள்ளவர்களுக்கு இரக்கம் வரும். இறங்கி வருவார்கள்.
இலங்கை அரசாங்கத்திற்கு எப்போது மனசாட்சி இருந்தது? எங்கள் சிறுவர்கள் கொன்று வீசப்படுவதுதானே மனிதாபிமானம். உண்மையில் அன்று போரில் எம் சிறுவர்கள்மீது கொன்றெறியப்பட்டதற்கும் இன்று பனி, வெயிலில் வாடிக் கிடப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. அன்றைக்கு அவர்கள் வாழ்ந்த மண்ணாக, அவர்களை மண்ணைவிட்டு அவர்களை துரத்தாமல், அதற்காக யுத்தம் செய்யாமல், சிறுவர்களை, குழந்தைகளை அவர்களின் உரிமையுடன் அணுகாமல் அழித்து ஒழித்ததுபோலவே இன்றைக்கும் அவர்கள் இனப் பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளும் முன்னெடுக்கும் போராட்டம் இது. ஒழுங்கான உணவின்றி, ஒழுங்கான உறக்கமின்றி, நிலம் இழந்த துயரம் படிந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தனர்? தம் தாய் நிலத்திற்காக இப்படி பனியிலும் குளிரிலும் வெயியிலும் போராட வேண்டிய நிலையிலுள்ளனர். கேப்பாப்புலவு பற்றிய பாடல்களை இயற்றி பாடிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். தம் தாய் நிலம் குறித்தும் அதில் வாழ வேண்டிய வாழ்வு குறித்தும் அந்தப் பிஞ்சுகளிடம் இருக்கும் கனவை, ஆசையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லையே. விமானப் படைவாசலாக்கப்பட்ட அப் பகுதியில் எந்த அச்சமுமின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விமானப் படையை நோக்கி அம்புவிட்டு விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்
அப் பகுதி சிறுவர்கள் எவரும் பாடசாலை போகவில்லை என்று தாய் ஒருவர் குறிப்பிட்டார். அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்விப் பாதிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மரங்களின் கீழே பெரியவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடல்களைப் பாடி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். ஆனால் எம் நிலத்திற்காக எப்படியெல்லாம் போராட வேண்டும் என்ற வரலாற்றுப் பாடத்தை கேப்பாபுலவுச் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். எந்தப் பாடசாலையிலும் அவர்கள் கற்க முடியாதொரு பாடத்தை அச் சிறுவர்கள் கற்கின்றனர்.
எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தது யார்? யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்? இப்படி எல்லாம் போராடும் எங்களை குரலை ஏன் அரசு செவிசாய்க்கவில்லை? நாங்கள் யார்? ஏன் இப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? இவைகளை கேப்பாபுலவு சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த ஈழச் சிறுவர்களுக்கும் செய்திகள் வழியும் புகைப்படங்கள் வழியும் ஊடகங்கள் வழியும் எடுத்து உணர்த்திக் கொண்டிருக்கிறது கேப்பாபுலவு மண்மீட்புப் போராட்டம்.
காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக சில செய்திகள் வந்தன. ஜனாதிபதி இணங்கினார் என்றும் இராணுவத்தளபதி இணங்கினார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த மக்களின் காணிகளை இலங்கை அரச படைகள் அபகரித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, போராட்டத்திற்கு வருபவர்களை புகைப்படம் பிடித்து பதிவு செய்கிறது விமானப்படை. அதனால் தமது நிலத்தை கையளித்து இராணுவம் வெளியே சென்ற பின்னர்தான் போராட்டம் நிறைவுபெறும் என மக்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.
கேப்பாபுலவு அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கியது அந்த நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று எச்சரிக்கிறார்கள் கேப்பாபுலவு மக்கள். அங்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்ல முடியாது. ஓர்மத்தை உறுதியை கேப்பாபுலவு மக்களிடமிருந்து ஈழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும்? ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமையும்.
 புகைப்படம்- குளோபல் தமிழ் செய்தியாளர் மயூரப்பிரியன்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More