சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் வலியுறுத்தினார்.காங்கிரஸ் கட்சியினரும் ரகசிய வாக்கெடுப்பே வேண்டும் எனவும் வாக்கெடுப்பை இன்னொரு தினத்துக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்துள்ளார். வாக்கெடுப்பு தனது தனிப்பட்ட தீர்மானம் எனவும் அதனை மாற்ற முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என ஓ.பி.எஸ் அணி மற்றும் திமுகவினர் முழக்கமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் எதிரேயுள்ள நாற்காலியை உடைத்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சசி தரப்பு மற்றும் பன்னீர்ச்செலவம் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பியதுடன் நாற்காலிகளை தூக்கி வீசியும், மைக்குகளைப் பிடுங்கி எறிந்தும்; கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிற்பகல் 1 மணி வரை சபை ஒத்திவைக்கப்ட்டுள்ளதுடன் சபாநாயகர் அவையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.