Home இலங்கை ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்:-

ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்:-

by admin

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தொல்லியல் இணைப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: 

அண்மையில் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதியில் ஈழத் தமிழரின் பண்டைய வாழிடம் குறித்த தொல்லியல் சான்றுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரான ப.புஸ்ரீ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. இந்த நிலையில் அண்மையில் நாகபடுவான் பகுதியில் பண்டைய வழிபாட்டு மையம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் பேராசிரியர் தலைமையிலான குழு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வு ஈழத் தமிழர்கள் குறித்த வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகளுக்கு முக்கியத்துமான சான்று என்று பேராசிரியர் கூறுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இவ் ஆய்வுக் கட்டுரையை நன்றியுடன் வாழ்த்துக்களுடன் குளோபல் தமிழ் செய்திகள் பிரசுரிக்கிறது. 
-ஆசிரியர்

நீண்டகாலமாக தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத வன்னிப் பிராந்தியத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதில் அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பூநகரிப்பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட முழங்காவில் குமுழமுனை வட்டாரங்களை அண்டிய நாகபடுவானில் தெரியவந்த தொல்லியற் சின்னங்கள் பற்றிய செய்திகளை அப்பிரதேச கிராம அலுவலகர்;, சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் எமது தொல்லியல் இறுதிவருட மாணவன் திரு.பானுசங்கருக்கு தெரியப்படுத்தினர்.

அதன் அடிப்படையில் தொல்லியற் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் மற்றும் பூநகரிப் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தொல்லியற்திணைக்களப் பிரதேசப் பொறுப்பாளர் திரு. பா. கபிலன் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கடந்தவாராம் அவ்விடத்தை அடையாளம் கண்டு அங்கு பரீட்ச்சகரமான  ஆய்வு ஒன்றை  மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடம் கட்டுக்கரைக்குளத்திற்கு வடமேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாகபடுவானில் கானா மேட்டைக் குளம் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் பழடைந்த குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இருந்த பாரிய மரமொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்பகுதியில் புதையுண்டிருந்த வரலாற்றுத் தொன்மை மிக்க பல சின்னங்கள்; வெளிக்கிளம்பியிருந்தன. இச்சின்னங்களை அச்சத்துடனும், ஆச்சரியமாகவும் பார்த்த மக்களில் ஒரு பிரிவினர் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணராமல் அச்சின்னங்களில் பலவற்றை ஆலயங்களுக்கும், தமது வீடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சியிருந்தவற்றை அச்சம் காரணமாக மக்கள் சிதைவடையச் செய்து ஒதுக்குப்புறங்களில் வீசியுள்ளனர்.
கட்டுக்கரை மட்பாண்டங்களை ஒத்தவை

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்வகையான தொல்லியற் சின்னங்கள் அவ்விடத்தில் பரந்த அளவில் மண்ணினுள் புதையுண்டிருப்பதை உணரமுடிந்தது. அவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் 4 ஒ 3 மீற்றர் நீள அகலத்தில் மாதிரிக்குழி அமைத்து அகழ்வு செய்தோம்.  இந்த அகழ்வின் போது அடையாளம் காணப்பட்ட மூன்று கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவை வடிவ அமைப்பிலும், தொழில் நுட்பத்திறனிலும் கட்டுக்கரைக் குளப்பிரதேச அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களைப்  பெருமளவு ஒத்ததாக உள்ளன. மூன்றாவது கலாசார மண் அடுக்கில் ஒரு சில மட்பாண்டங்களுடன் பெருமளவு சுடுமண் உருவங்களும், கழிவிரும்புகளும் (ஐசழn ளுடயமநள) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இக்கலாச்சார மண்படையில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் உருவங்களும், மட்பாண்டங்களும் இங்கு வாழ்ந்த பண்டைய கால மக்களின் சமய நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. அச்சுடுமண் உருவங்களில்  பீடத்தின் மேல் அமர்ந்திருக்கும் இரு தெய்வங்களின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இத்தெய்வச் சிலைகளை ஊர்வலமாகத் தூக்கிச் செல்லும் வகையில் அதன் சதுரமான பீடத்தின் நான்கு பக்கங்களிலும் முக்கோண வடிவிலமைந்த சதுரமான துவாரங்கள் காணப்படு கின்றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலைகளின் இரு கால்களும் காற்சலங்கைகளுடன் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சிலையின்  வலது கரம் பிற்கால தெய்வச் சிலைகளில் இருப்பது போன்ற அபயக~;தமாகவும்,  இடது கரம் வரதக~;தமாகவும் தோற்றமளிக்கின்றன. அவற்றின் வலது க~;தத்தின் உள்ளங்கையில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்காலச் சிலைகள், செப்புத் திருமேனிகளின் கலைவடிவங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. இருப்பினும் இச்சிலைகளின்  தலைப்பாகங்கள்  பெருமளவுக்கு சிதைவடைந்த நிலையிலேயே காணப்பட்டன. அவற்றிடையே கிடைத்த நட்சத்திரவடிவிலான தோடணிந்த காதுகள், தாடைப்பகுதிகள் பண்டைய கால மக்களின் கலைமரபையும், உயர்ந்த தொழில் நுட்பத் திறனையும் புலப்படுத்துவதாக உள்ளன. இச்சிற்பங்களுடன் சேர்ந்ததாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.  அக்கைகளில் சிலவற்றின் உள்ளங்கைகளில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலைகளாக இவை இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

பண்டைய வழிபாட்டு மையம்

இச்சிலைகளுடன் இவ்வகழ்வாய்வில் கிடைத்த பிற தொல்லியற் சின்னங்கள் இவ்விடம் பண்டையகால மக்களின் வழிபாட்டிற்குரிய மையமாக இருந்திருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. இதற்கு அகழ்வாய்வின் போது கிடைத்த பல அளவுகளிள் வடிவங்களில் அமைந்த நாக உருவங்கள், ஆமையின் வடிவம்,  அகல் விளக்குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்பவற்றின் உடற்பாகங்கள், இலிங்க வடிவங்கள், பல அளவுகளில் பயன்படுத்தப்பட்ட சட்டிகள், தட்டுகள், அவற்றின் விழிம்புகளில் படுத்துறங்கும்  நாக பாம்பின் உருவம் என்பவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இச்சான்றாதாரங்களுடன் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரு சுடுமண்  அச்சுக்கள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றின் ஒருபக்கத்தில்  புள்ளிகளான இலட்சனை அல்லது பண்டைய கால எழுத்துக் காணப்படுகின்றது. இது அறிஞர்களின் முறையான பொருள் விளக்க்கத்தைப் பெறும்பட்சத்தில் இங்கிருந்த குடியிருப்புக்கள் மற்றும் சமயச் சின்னங்களின் காலத்தை நிச்சயப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நம்பலாம்.
ஈழத் தமிழர் பூர்வீக வரலாற்றுச் சான்று

தமிழகத்தில் சுடுமண்ணாலான தெய்வ உருவங்கள், அரசனின் சிலைகள், சமயச் சின்னங்கள் என்பன நீர்நிலைகளை மையப்படுத்தி இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குடியிருப்புப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தெய்வ உருவங்கள் கிராமி தெய்வங்கள் அல்லது நாட்டுப்புற தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்ததற்கு சங்க இலக்கியத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
நாகபடுவானில் இவ்வகைச் சிலைகள், சிற்பங்கள் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகே தெற்கிலும், மேற்கிலும் உள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த இரு குளங்களின் அணைக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இதனால் இங்கு கிடைத்த சமயச் சின்னங்கள் கட்டுக்கரைக் குளத்தைப் போல் பண்டைய காலத்தில் குளத்தை மையப்படுத்தி தோன்றிய குடியிருப்புக்களுக்குரிய பெறுமதிமிக்க சான்றுகளாகக் கொள்ளத்தக்கன. இவை ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை  எனலாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More