மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுசா தர்சினி சந்திரசேகரனுக்கு வரவேற்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. அண்மையில் அனுசா தர்சினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியின் உயர் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான அ.அரவிந்தகுமார்,மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம்,முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்,உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இலங்கையில் எந்த ஒரு பகுதியிலும் சரியான பெண் தலைமைத்துவம் அண்மைக்காலகமாக உருவாக்கப்படவில்லை.அது வடகிழக்கில் படித்த சமூகமாக இருந்தால் என்ன தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதனை செய்யவில்லை தெற்கில் ஜக்கிய தேசிய கட்சி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,மக்கள் விடுதலை முன்னணி என எந்த ஒரு கட்சியும் பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்த தவறை ஏன் மலையக பெண்கள் திருத்தக்கூடாது. இலங்கையில் இருக்கின்ற பெண்களுக்கு மலையக பெண்கள் ஏன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க கூடாது எனத் தெரிவித்தார்.
மேலும் மலையக மக்கள் முன்னணி இன்று ஒரு படித்த இளம் அரசியல் பின்புலம் உள்ள ஒருவரை அடையாளப்படுத்தியிருக்கின்றது எனவும் அவரை எதிர்காலத்தில் அரசியலில் உருவாக்க வேண்டிய பொறுப்பு மலையக பெண்களுக்கே இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.