இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுவது மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை விவகாரங்கள் குறித்த பல்வேறு சவால்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் போது இடம்பெறும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் யுத்தக் குற்றச் செயல்களைப் போன்றே வேறு பல்வேறு விடயங்களிலும் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை நீடித்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்கியவர்கள் தொடர்ந்தும் துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை தமிழர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.