படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு இரவு பகலாக மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (புதன்கிழமை) மறியல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமூக அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் இன்று காலை 9.30 மணிக்கு இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணி விடுவிப்பு கோரி படை முகாம்களுக்கு முன்னால் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பிரதேசங்களில் மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இம்மக்களுடன் பல்கலைக்கழக சமூகத்தினர், பாடசாலை மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற சமூகத்தினரும் கைகோர்த்துள்ளனர்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பரவிப்பாஞ்சான் மக்களை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.