விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, புலிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் இன்னும் நாட்டில் உள்ளனர் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான உதயசாந்த குணசேகர, அரசமைப்பின் 157(அ) உறுப்புரையின் கீழ் இதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே சட்டம் ஒழுங்கு அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அத்தோடு, பிரவினைவாத செயற்பாடுகளுக்கு அரசு ஒருபோதும் துணைபோகாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.