தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
இலங்கையின் சமாதான முனைப்புக்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி றிற்றா இஸாக் நிதியே ( Rita Izsák-Ndiaye) அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஒரே நாளில் தீர்வு வழங்க முடியாது என்பது யதார்த்தமானது என்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமாதான முயற்சிகள் திருப்தி அளிக்கும் வகையில் கிடையாது என தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பதனை புதிய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கான முனைப்புக்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அரசியல் அபிலாசையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகத்தினர் பாதுகாப்பாக இருப்பதனை உணரக்கூடிய வகையில் தீர்வுத் திட்டங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் காரணமாக உளவியல் பாதிப்புக்களை அழுத்தங்களை எதிர்நோக்கியோருக்கு ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.