கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இரவு பகலாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும், பரவிபாஞ்சான் மக்களின் நிலம் மீட்பு போராட்டத்திற்கும் சந்தை வர்த்தங்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டுடனர்.
இன்று வியாழக்கிழமை 23-02-2017 காலை சேவைச் சந்தையின் வர்த்தக நிலையங்களை மூடி சந்தையிலிருந்து ஊர்வலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்ற வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் எமது மக்களின் காணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. கடந்த அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, அவர்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுக்காத அரசாக இருந்ததன் காரணமாக நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவோம் என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நல்லாட்சி அரசுக்கு வாக்களித்து புதிய அரசை ஏற்படுத்த உதவியிருந்தோம்
புதிய அரசும் தமிழ் மக்களின் காணி பிணக்கு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றவற்றை தீர்த்து வைப்பதாக கூறியிருந்தது. அதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் எங்களிடம் உறுதியளித்திருந்தார்கள் ஆனால் புதிய அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கடந்தவிட்ட நிலையில் எதுவும் நடைபெறவில்லை கடந்த ஆட்சி போன்றே இந்த ஆட்சியும் காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் இந்த அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காது அரசுக்கு ஆதரவுவளித்து வருகின்றனர் இது கவலையளிக்கிறது என சந்தை வர்த்தகச் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.