கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவிடம், ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கமாலை அழைத்து விசாரணைக்கு உட்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கீத் நொயார் கடத்தப்பட்டமை குறித்து அமால் கருணாசேகர தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கபில ஹெந்தாவிதாரணவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி உரையாடல் பற்றிய தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.