உலகில் தொடரும் மோதல்களுக்கு தீர்வு காண சர்வதேச அமைப்புகள் தீவிரமாக களமிறங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவுக்குள் தீர்க்கப்படாத, நீடித்த மோதல்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தற்பொழுது புதிய அச்சுறுத்தல்களும், சவால்களும் உருவாகி வருகிறது எனவும் ஜனரஞ்சகம், தேசிய வாதம் மற்றும் பிரிவினைவாதம் தான் இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல சமயங்களில் அமைதி உடன்படிக்கைகள் அமுல்படுத்தப் படுவதில்லை எனவும் ஜனநாயக நிர்வாகம் மற்றும் சட்டப்படியான ஆட்சி முறைகளுக்கு எதிரான சவால்களே மோதல்களுக்கு காரணம் எனத் தெரிவித்த அவர் அரசியல் ஆதாயத்துக்காகவும் சுய லாபத்துக்காகவும்தான் இன, பொருளாதார, மத மற்றும் ஜாதி ரீதியிலான பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை சரியான முறையில் கையாண்டு தடுக்க வேண்டிய பொறுப்பு சர்வதேச அமைப்புகளுக்கு இருக்கிறது எனவும் இதற்காக சர்வதேச அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.