Home இலங்கை ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வடக்கு கிழக்குப் போராட்டங்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வடக்கு கிழக்குப் போராட்டங்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin

வடக்கு கிழக்கு முழுவதும் அகிம்சைப் போராட்டங்கள் பல நடைபெற்றுள்ளன. தமிழ் மக்கள் வீதிக்கு வந்து உயிரையும் நிலத்தையும் கோரினாலும் பதிலளிக்காது சிரித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.  காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் உறவுகள் கிளிநொச்சி கந்தசாமி கோயிலடியில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பனியிலும் குளிரிலும் வெயிலிலும் அந்த மக்கள் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியபடி கண்ணீரோடு போராடும் அந்த மக்களை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை.
கடந்த 25 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறும் நிலங்கள் கையளிக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாபுலவு மக்களையோ, அல்லது ஒடடுமொத்த ஈழத் தமிழ் மக்களையே தன்னுடைய பிரஜைகளாக இலங்கை அரசு கருத்தியிருந்தால் அவர்களின் நிலங்களை கையளித்திருக்கும். வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு அரசாக இலங்கை அரசு இருப்பதன் காரணமாகவே தமிழ் மக்களின் நிலங்களை கையளிக்க மறுக்கிறது.
கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களும் எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, கேப்பாபுலவு மக்களின் நிலத்தை திருப்பிக் கொடு என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தெற்கிலிருந்து சிங்கள மக்களும் வந்து கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்திருப்பதுடன் அதன் நியாயத்தையும் எடுத்துரைக்கிறார்கள்.
சிங்கள மக்களே ஏற்றாலும் அரசு ஏற்கத் தயாரில்லை போலும். இலங்கை அரச தரப்பில் கேப்பாபுலவை விடுவிப்பதற்கான வாக்குறுதிகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் கூறப்பட்டாலும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக இலங்கை விமானப்படை போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். வடக்கு கிழக்கின் ஜனநாயகப் போராட்டங்களை கண்டு சிறு சலசலப்புமின்றி மிக இயல்பாக இருக்கும் இலங்கை அரசு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. அது ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை மீண்டும் எடுத்துரைக்கிறது.
இத் தீவில் ஜனநாயகப் போராட்டங்கள் மதிக்கப்படாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களின் குரலுக்கு இலங்கை அரசு செவி சாய்க்காது. அவர்களை தமது பிரஜைகளாக இலங்கை அரசு கருதியிருந்தால் செவி சாய்க்கும். கேட்பாரின்றி, பதிலற்று, தீர்வற்றுத் தொடரும் வடக்கு கிழக்கு அகிம்சைப் போராட்டங்கள் மாத்திரமின்றி ஒரு சில பாராளுமன்ற அரசியல் பேச்சுக்களும் ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள படை வெயியேறுவதும், சிங்களப் படைகள் இழைத்த இனப்படுகொலைக்கு தண்டனை பெறுவதும் தான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் போராட்டமும்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறிய கருத்து ஒன்று தமிழ் மக்களினால் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. சில படையினர்தான் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்றும் அனைத்துப் படையினரும் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இந்த உரை பலரையும் விசனமடையச் செய்துள்ளது.

“இலங்கைத் தமிழர் மீது இனஅழிப்பைக் கட்டவிழ்ப்பதனூடாக அடக்கியாளவும் தலைப்பட்டது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடே தேசிய இனப் பிரச்சினையை சர்வதேச மயமாக்கியதோடு சர்வதேச வகிபாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டின் தவிர்க்க முடியா விளைவான ஆயுதப் போராட்டம் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளது.” இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் சிறுபகுதி. இவ் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறாக இரா. சம்பந்தரின் அண்மைய பாராளுமன்ற பேச்சு அமைந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் வரலாறு முழுவதும் தமிழ் இனம் கட்டமைக்கப்பட்ட ரீதியில் அழிக்கப்பட்டு வருகிறது என்பதும் வடக்கு கிழக்கு மக்களின் குரல். இதனையே வடக்கு மாகாண சபை தீர்மானமாக நிறைவேற்றி உலகிற்கு அறிவித்தது. இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை கோருவோம் என்ற நிலைப்பாட்டிற்காகவே கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகளை செலுத்தினர். மேற் குறித்த இரா.சம்பந்தரின் கருத்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இக் கருத்தினை அறியும் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயின் மனம் எப்படி இருக்கும்? போரில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கு எப்படி இருக்கும்? தமிழ் இனம்மீது வரலாறு முழுவதும் இனப்படுகொலைதான் நடந்திருக்கிறது. வடக்கு கிழக்கு எங்கும் இனப்படுகொலைகள் நடந்துள்ளன. மிகவும் மூர்க்கமான இனப்படுகொலை யுத்தம் எங்கள் மக்கள் ஒன்றரை லட்சம் போரை இறுதி யுத்தத்தின்போது காவு கொண்டது. நடந்தது இனப்படுகொலை என்பது உலகிற்கு தெரியும். ஆனாலும் தெரியாததைப்போல் பாவனை செய்யும் உலகம். இதுவரையில் உலகும் இலங்கை அரசும்தான் இனப்படுகொலை நடக்காததைப் போல பாவனை செய்து வந்த நிலையில் இப்போது சம்பந்தரும் பாவனை செய்வது பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப் போன்றது.
அண்மையில் மட்டக்களப்பு நகரில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றது. வடக்கில் நடந்த எழுக தமிழ் பேரணியைக் காட்டிலும் கிழக்கில் அதிகமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடந்த எழுக தமிழ் பேரணி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் நிலத்தாலும் உணர்வாலும் பிரிக்க முடியாதது என்பதையும் அங்கு தமிழ் மக்கள் தன்னாட்சியை கோரி நிற்கிறார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. இராணுவ வெளியேற்றம், நில விடுவிப்பு, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை என்பனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
“இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெனவும், அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’ என்கின்ற தனது அரசியற் கோட்பாட்டினை முன்வைத்தது. இந்த உரிமையை செயற்படுத்தவென தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தன்னாட்சி ஏற்பாடு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிநின்றது.” இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு பற்றிய பகுதியாகும்.
அரசியலமைப்பு கருத்தறியும் அமர்விலும் நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் அமர்விலும் வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சி வழங்க வேண்டும் அதுவே ஈழத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு என்றும் அதுவே நல்லிணக்கத்திற்கான பொறிமுறையின் அடிப்படை என்றும் எமது மக்கள் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதை ஆணையாக கேட்டிருந்ததோ, அதையே  வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தனிநாடு கோரிய தமிழ் மக்கள், விட்டுக் கொடுப்போது கோரும் இந்த அரசியல் தீர்வும், அதனை பெற்றுக் கொடுக்கும் பங்களிப்புமே எதிர்கால ஈழப் போராட்டத்தை நிர்ணயிக்கும்  எனலாம்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More