பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை விடுத்துள்ள அறிக்கையில் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டித் தொடரிலும் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தசைப்பிடிப்பு உபாதை பூரணமாக குணமாகா நிலையில் போட்டித் தொடரில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதன்படியே டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைமை பொறுப்பு ரங்கன ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகின்ற அதேவேளை, 15ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.