ஈழத்தின் புகழ்பூத்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் ஈழத்தின் சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர்.
1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.
இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.
இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்.
இவர் பாடிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார், ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற பல புரட்சிப் பாடல்கள் பிரபலமானவை. தன் புரட்சிகார பாடல்களால் உலக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்ற பாடகராகவும் மிளிர்ந்தவர்.