வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெற்கின் மாத்தறை, மொனறாகலை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகள் சுமார் 20 பேர் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இவ் பயணத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அம் மக்களின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி நிலை போன்றவை தொடர்பில் ஆராய்ந்த இளைஞர்கள், தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னரும் ஒழுங்கான வீடு, மலசல கூடம், மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இம் மக்கள் வாழ்வது பற்றி தென்பகுதிகளில் வாழும் தம்மைப் போன்ற பலருக்கும் தெரியாதென இவ் இளைஞர்கள் தெரிவித்தனர்.
இங்குள்ள மக்களின் நிலைமை மற்றும் வடக்கின் உண்மை நிலை தொடர்பில் தெற்கில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி, தெற்கு மக்கள் மத்தியில் உள்ள சில தவறான எண்ணங்களை நீக்க முயற்சிப்பதாகவும் இங்குள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு தம்மாலான உதவிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, குறித்த இளைஞர், யுவதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று காணி விடுவிப்பு கோரி போராடும் மக்களுக்கும் தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.