முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில், ஹ்யூ போன்வில் – மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண்ட்பேட்டன் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில் மவுண்ட்பேட்டனாக நடித்துள்ள ஹ்யூ போன்வில், தோற்றத்தில் என் தந்தையை போன்று இல்லை. இருப்பினும் அழகாக நடித்துள்ளார்.
டெல்லி டெல்லியில் நாங்கள் இருந்த வைஸ்ராய் வீட்டில் 340 அறைகள் இருந்ததன. பூ அலங்காரத்தை பார்த்துக் கொள்ள மட்டும் 25 தோட்டக்காரர்கள் இருந்தனர். என் தந்தை அவரது இளமை காலத்தை ரஷ்யாவை சேர்ந்த அவரின் மாமனார், மாமியுடன் பெரிய பெரிய கட்டிடங்களில் வாழ்ந்தார். அதனால் டெல்லி வீடு அவருக்கு பெரியதாக தெரியவில்லை.
வைஸ்ராய்ஸ் ஹவுஸ் படத்தில், ஜிலியன் ஆண்டர்சன் என் தாய் எட்வினா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். என் தாய் போன்றே நடக்க முயற்சித்துள்ளார். என் தாய் எட்வினாவும், முன்னாள் இந்திய பிரதமர் நேருவும் உயிருக்கு உயிராக காதலித்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே பாலியல் சம்பந்தப்பட்ட உறவு இருக்கவில்லை.
நேருவும், எட்வினாவும் காதலித்தபோதிலும் அவர்கள் எப்பொழுதுமே தனியாக இல்லை. அவர்களை சுற்றி பாதுகாவலர்கள் உள்பட யாராவது இருந்து கொண்டே இருந்தனர். நேரு தனது நண்பர் வீட்டில் அவரின் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டார். அவர் மிகவும் நேர்மையான மனிதர். நேரு, எட்வினாவை பார்த்து என் தந்தை பொறாமைப்படவில்லை. அந்த உறவால் என் தாய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என் தந்தைக்கு தெரிந்தது என 87 வயதாகும் பமிலா தெரிவித்துள்ளார்.